தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புதிய உடன்பாடுகள் செய்துகொண்ட சிங்கப்பூர், நியூ சவுத் வேல்ஸ்

2 mins read
2f94944b-6dd8-4a03-aed3-caf93f26e001
(வலது) பிரதமர் லாரன்ஸ் வோங்கும் ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி ஆல்பனீசும் சந்தித்துக்கொண்டனர். - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

கேன்பரா: சிங்கப்பூருக்கும் ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்துக்கும் இடையே வர்த்தகப் பங்காளித்துவத்தைக் கூடுதலாக வலுப்படுத்த புதிய உடன்பாடு செய்யப்பட்டுள்ளது.

புத்தாக்கம், பசுமைப் பொருளியல் ஆகியவற்றிலும் அந்த உடன்பாடு கவனம் செலுத்தும்.

சிங்கப்பூரின் எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் (எண்டர்பிரைஸ் எஸ்ஜி) அமைப்பும் நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கமும் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 7) உடன்பாட்டில் கையெழுத்திட்டன.

பிரதமர் லாரன்ஸ் வோங்கும் நியூ சவுத் வேல்ஸ் முதல்வர் கிரிஸ் மின்சும் சந்தித்துக்கொண்டதை அடுத்து உடன்பாடு செய்யப்பட்டது.

ஆஸ்திரேலியாவின் பொருளியல், நிதி நடுவமாக இருக்கும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் பலத்தைப் புதிய பங்காளித்துவம் மூலம் சிங்கப்பூர் பயன்படுத்திக்கொள்ளும் என்று எண்டர்பிரைஸ் எஸ்ஜி குறிப்பிட்டது.

சிங்கப்பூரில் தொடங்கப்படும் தொழில்களுக்குத் தளமாக விளங்கும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் பங்கை உடன்பாடு மேம்படுத்தும் என்று நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கம் தெரிவித்தது.

நியூ சவுத் வேல்ஸ் மாநில முதல்வர் கிரிஸ் மின்ஸ் (வலமிருந்து இரண்டாவது) பிரதமர் வோங், வெளியுறவு அமைச்சர் விவியன் உள்ளிட்ட சிங்கப்பூர் குழுவினரைச் சந்தித்தார்.
நியூ சவுத் வேல்ஸ் மாநில முதல்வர் கிரிஸ் மின்ஸ் (வலமிருந்து இரண்டாவது) பிரதமர் வோங், வெளியுறவு அமைச்சர் விவியன் உள்ளிட்ட சிங்கப்பூர் குழுவினரைச் சந்தித்தார். - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

உடன்பாடு மூலம் சிங்கப்பூரிலும் ஆஸ்திரேலியாவிலும் உள்ள வர்த்தகங்களுக்குப் புதிய வாய்ப்புகள் பிறக்கும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் ஃபேஸ்புக்கில் பதிவிட்டார். அது சிங்கப்பூர்- ஆஸ்திரேலிய உறவையும் வலுப்படுத்தும் என்றார் அவர்.

சிட்னியில் இருந்த திரு வோங் ஆஸ்திரேலிய வர்த்தகத் தலைவர்களுடன் வர்த்தகம், முதலீடு, பசுமை எரிசக்தி, மின்னிலக்கப் பொருளியல் ஆகியவை குறித்து கலந்துரையாடினர்.

சிட்னிக்கு மேற்கொண்ட பயணம் நல்ல பலன் கொடுத்தது என்ற அவர், ஆஸ்திரேலியாவுடன் தொடர்ந்து பணியாற்ற ஆவலுடன் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

கேன்பரா சென்ற பிரதமர் வோங்கிற்கு ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி ஆல்பனீஸ் விருந்தளித்தார்.

இருநாட்டுத் தலைவர்களும் புதன்கிழமை (அக்டோபர் 8) பத்தாவது சிங்கப்பூர் - ஆஸ்திரேலியத் தலைவர்களுக்கான கூட்டத்தை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்