சிங்கப்பூரின் பழைய ஹோட்டல்களில் ஒன்றான மிரமார் ஹோட்டலை ஆராவெஸ்ட் (Aravest) என்னும் சொத்து மேலாண்மை நிறுவனம் $160 மில்லியனுக்கு வாங்கியுள்ளது.
மொத்தம் 344 அறைகளைக் கொண்ட அந்த ஹோட்டலை புதுப்பித்து மறுபெயர் சூட்டத் திட்டமிடப்பட்டு உள்ளது.
ஹேவ்லாக் ரோட்டில் உள்ள அந்தப் பழைய ஹோட்டலை வாங்குவதற்கான விலையை அறைகளின் எண்ணிக்கையோடு கணக்கிட்டால், அறை ஒன்றுக்கு ஏறத்தாழ $465,100 விலை கொடுக்கப்படுகிறது.
சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட வீ ஹர் நிறுவனம், ஆராவெஸ்ட் நிறுவனம் நிர்வகிக்கும் புதிய நிதித் திட்டப் பங்குகளை வாங்கியதன் மூலம் மிரமார் ஹோட்டலைக் கைப்பற்றி உள்ளது.
இதன் மூலம் ஹோட்டல் முதலீட்டில் வீ ஹர் அடியெடுத்து வைக்கிறது. அதன் துணை நிறுவனமான ‘வீ ஹர் பிராப்பர்டி’ புதிய நிதியின் கணிசமான பங்குகளைப் பெற்றுள்ளதாக ஆராவெஸ்ட்டும் வீ ஹர்ரும் இணைந்து வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
அக்டோபர் மாத இறுதியில் மூடப்பட்ட மிரமார் ஹோட்டலை புதிய நிர்வாகத்தின் கீழ் இயக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது. அதற்கு முன்னர் 12 மாத புதுப்பிப்புப் பணிகள் அங்கு நடைபெற உள்ளன.
மிரமார் ஹோட்டலை நிரந்தரமாக மூடுவது தொடர்பான அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் வெளியிடப்பட்டது.
மூடப்படுவதால் அந்த ஹோட்டலில் பணிபுரிந்த 108 ஊழியர்களும் ஆட்குறைப்புக்கு ஆளாவார்கள் என்று அப்போது கூறப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
பாதிக்கப்படுவோருக்கு நியாயமான முறையில் உதவிகள் வழங்கப்படுவது பற்றி தொழிற்சங்கத்துடன் ஹோட்டல் நிர்வாகம் கலந்துபேசியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அந்த ஊழியர்களுக்கு கூட்டு ஒப்பந்த அடிப்படையிலும் தொழிற்சங்க விதிமுறைகளுக்கு இணங்கவும் நியாயமான ஆட்குறைப்பு அனுகூலங்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பை ஹோட்டல் நிர்வாகம் வெளியிட்டது.
ஹேவ்லாக் ரோட்டில் 1971ஆம் ஆண்டு திறக்கப்பட்டது ஹோட்டல் மிரமார். நகரின் வெளிப்புற வட்டாரத்தில் 1960களின் பிற்பகுதியிலும் 1970களிலும் ஹோட்டல்கள் அதிகமாகக் கட்டப்பட்டபோது இந்த ஹோட்டலும் உதயமானது.

