ஹாங்காங் காற்பந்து ஆட்டக்காரர்களையும் ஆதரவாளர்களையும் ‘முட்டாள்கள்’ என வர்ணித்ததை அடுத்து, தாம் மரியாதையுடன் பேசியிருக்க வேண்டும் என்று கலாசார, சமூக, இளையர்துறை தற்காலிக அமைச்சர் டேவிட் நியோ புதன்கிழமையன்று (நவம்பர் 19) வருத்தம் தெரிவித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமையன்று (நவம்பர் 18) ஹாங்காங்கை 2-1 எனும் கோல் கணக்கில் சிங்கப்பூர் தோற்கடித்து ஆசியக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
அந்தத் தகுதிச் சுற்று ஆட்டம் ஹாங்காங்கின் கை டாக் விளையாட்டரங்கில் நடைபெற்றது.
ஆட்டத்துக்குப் பிறகு, ஆட்டக்காரர்களுக்கான அறையில் சிங்கப்பூர் குழுவினரிடம் அமைச்சர் நியோ பேசினார்.
அப்போது அவர் பேசியபோது, “நீங்கள் மிக அருமையாக விளையாடினீர்கள். எதிரணி நெருக்குதல் தந்தது. அவர்களது ஆதரவாளர்கள் முட்டாள்தனமாக நடந்துகொண்டனர். ஹாங்காங் ஆட்டக்காரர்களும் முட்டாள்தனமாக விளையாடினர். ஆனால், நீங்கள் அனைவரும் சிங்கங்களைப் போல விளையாடினர்,” எனக் கூறினார்.
இதைக் கேட்டு அறையில் இருந்த சிங்கப்பூர் குழுவினர் ஆரவாரம் செய்தனர்.
இதை சிங்கப்பூர் குழுவைச் சேர்ந்த இக்சான் ஃபாண்டி காணொளி எடுத்து நேரடி ஒளிபரப்பு செய்தார்.
இதைப் பார்த்த இன்ஸ்டகிராம் பயனர் ஒருவர் கருத்து தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
அமைச்சர் பதவி வகிக்கும் நியோ, அதற்கு ஏற்ப முறையாக நடந்துகொள்ளவில்லை என்றார் அவர்.
இந்நிலையில், தாம் கூறிய கருத்துகளைத் திரும்பப் பெறுவதாகத் திரு நியோ தெரிவித்தார். தாம் மரியாதையுடன் பேசியிருக்க வேண்டும் என்று அவர் வருத்தம் தெரிவித்தார்.
“ஹாங்காங் குழுவினர் கடும் சவாலாக விளங்கினர். அவர்களது ஆதரவாளர்கள் அவர்களுக்கு முழு ஆதரவு தந்தனர். அதை நாம் மதிக்க வேண்டும். அதே சமயத்தில் நமது அணிக்கு ஆதரவை வழங்க வேண்டும்,” என்று திரு நியோ குறிப்பிட்டார்.

