தோஹாவில் இஸ்ரேல் அண்மையில் நடத்தியுள்ள வான்வழித் தாக்குதல்கள், கத்தாரின் இறையாண்மைக்கு ஏற்பட்ட அப்பட்டமான மீறல் என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு புதன்கிழமை (செப்டம்பர் 10) தெரிவித்தது.
“இந்தத் தாக்குதல் கடுமையான, ஆபத்தான செயலாகும். காஸாவில் போர் நிறுத்தம், பிணைக் கைதிகள் விடுதலை ஆகியவற்றுக்கான பேச்சுவார்த்தைகளையும், உடன்படிக்கையை எட்டுவதற்காகக் கத்தார் இடைவிடாது மேற்கொண்டுவரும் முயற்சிகளையும் சீர்குலைக்கிறது” என்று அமைச்சு கூறியது.
திங்கட்கிழமை நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்கள், ஹமாஸ் தலைவர்களை குறிவைத்தவை என்று இஸ்ரேல் கூறியுள்ளது. ஆனால், இத்தாக்குதல்கள் கோழைத்தனமானவை என்று கத்தார் கண்டித்துள்ளது. அனைத்துலகச் சட்டத்தை தாக்குதல்கள் அப்பட்டமாக மீறுவதாகவும் கத்தார் குறைகூறியது.
“சிங்கப்பூர் கத்தாருடன் உறுதுணையாக நிற்கிறது” என்று வெளியுறவு அமைச்சு தனது அறிக்கையில் குறிப்பிட்டது.
ஏற்கெனவே பதற்றமான நிலையில் உள்ள மத்திய கிழக்கில், மேலும் பதற்றத்தை அதிகரிக்கக்கூடிய ஒரு செயல் இது என்று உலகத் தலைவர்கள் இத்தாக்குதல்களைக் கண்டித்துள்ளனர்.
கத்தாரின் அரசுரிமையை மீறும் செயலாக இந்தத் தாக்குதல் உள்ளதாக ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் தெரிவித்தார்.
முடிவான போர் நிறுத்தத்தை அடைவதற்கு அனைத்துத் தரப்பினரும் உழைக்க வேண்டும், அதனைச் சீர்குலைப்பது தவறு என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தாக்குதல் குறித்து ‘ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடகத்தளத்தில் பதிவிட்ட அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், “இஸ்ரேலின் அல்லது அமெரிக்காவின் இலக்குகளை இந்தத் தாக்குதல் மேம்படுத்தாது” என்று கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“இருப்பினும், காஸாவில் வாழும் மக்களின் துயரத்திலிருந்து பயன்பெறும் ஹமாஸை ஒழிப்பது, நல்ல குறிக்கோள்,” என்றும் அவர் கூறினார்.
இஸ்ரேலின் தாக்குதல் குறித்து தான் ‘மகிழ்ச்சியடையவில்லை’ என்று வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் டிரம்ப் தெரிவித்தார்.
ஹமாஸ் தலைவர்களைக் குறிவைத்தது முழுமையாக, தன்னிச்சையாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவின் அலுவலகம் கூறியது
அமெரிக்காவின் பாதுகாப்புப் பங்காளியாகத் திகழும் கத்தார், மத்திய கிழக்கில் ஆகப்பெரிய அமெரிக்க இராணுவத் தளமான அல்-உடேய்ட்டைக் கொண்டுள்ளது.
இந்தத் தாக்குதல், காஸா போர்நிறுத்தத்தின் வாய்ப்புகளை மேலும் குறைக்கக்கூடும் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
சவுதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அரபு சிற்றரசுகள், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை இந்தத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.
இதற்கிடையே, டோஹாவில் உள்ள சிங்கப்பூரர்கள் கவனமாக இருக்கும்படியும் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும் கூட்ட நெரிசல் மிகுந்த பகுதிகளைத் தவிர்க்கவும் உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும் சிங்கப்பூர்த் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.
அத்துடன், அவசர காலங்களில் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சின் உடனடித் தொடர்பைப் பெற டோஹாவிலுள்ள சிங்கப்பூரர்கள் தங்களைப் பதிவு செய்துகொள்ளுமாறும் தூதரகம் அறிவுறுத்தியது.

