தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
2025ஆம் ஆண்டு இறுதியில் காலாவதியாகும் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் உதவித்தொகை

பத்தில் ஏழு சிங்கப்பூரர்கள் இன்னும் பயன்படுத்தவில்லை

2 mins read
27ec8b96-68bd-494e-92fa-ad9c78ff8c46
கடந்த செப்டம்பர் மாதம் வரை, 778,500க்கும் மேற்பட்டோர் ஒரு முறை வழங்கப்படும் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் உதவித்தொகையைப் பயன்படுத்தியுள்ளனர். - படம்: சாவ்பாவ்

ஸ்கில்ஸ்ஃபியூச்சர் உதவித்தொகையைப் பயன்படுத்தாத பலரைப் போலல்லாமல், தரவுப் பகுப்பாய்வாளர் ராண்டி ஆங், 34, தனது அனைத்து உதவித்தொகையையும் ஒரு பாடத்திட்டத்தில் பயன்படுத்தியுள்ளார். இது அவரைச் சுகாதார நிர்வாகத்திலிருந்து தொழில்நுட்பத் துறைக்கு முன்னிலைப்படுத்த வழிவகுத்தது.

அந்தக் கணக்கியல் பட்டதாரி முதன்முதலில் 2017ஆம் ஆண்டு இணையத்தள மேம்பாடு மற்றும் நிரலாக்கத்தில் பலதுறைத் தொழிற்கல்லூரி டிப்ளோமா மாற்றப் பாடநெறிக்காக அந்த உதவித்தொகையைப் பயன்படுத்தினார். பின்னர் நிறுவன வர்த்தகப் பகுப்பாய்வில் முதுகலைப் பட்டம் பெறுவதற்காக, தனது வேலையிலிருந்து ஓர் இடைவெளி எடுத்துக் கொண்டார்.

வாழ்நாள் கற்றலில் இருந்து பயனடைந்த ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பயனாளராக இருந்தாலும், இந்தத் திட்டத்திலும் சவால்கள் உள்ளன என்று திரு ஆங் கூறினார். அவருக்கு கற்றலுக்கான நேரத்தை வகுப்பதே மிகப்பெரிய சவாலாக இருந்தது. அதற்கு அவர் கடுமையான தியாகங்களைச் செய்ய வேண்டியிருந்தது.

“சில பயிற்சிகளுக்கு வாரத்தில் மூன்று நாள்கள் வேலைக்குப் பிறகு செல்ல வேண்டியிருந்தது. ஓராண்டு முழுவதும் வீட்டுப்பாடம் மற்றும் தேர்வுகளுடன் கடுமையாகச் சமாளித்தேன். அது என்னை மிகவும் சோர்வுடையவனாக ஆக்கியது,” என்று அவர் கூறினார்.

சேனல் நியூஸ் ஏஷியாவுடன் பேசிய மற்றவர்கள், ஸ்கில்ஸ்ஃபியூச்சர் அமைப்பின் பல தனித்தன்மைகளை எடுத்துரைத்தனர்.

நேரமின்மை, பொருத்தமான பயிற்சிகளைக் கண்டுபிடிப்பதில் சிரமங்கள் ஆகியவை அவர்களின் சவால்களில் அடங்கும். அதே நேரத்தில் பயிற்சியில் சேரும் ஊழியர்கள் தங்கள் வாழ்க்கைத்தொழிலுக்கு அந்தப் பயிற்சிகள் பலனளிக்குமா என்ற சந்தேகங்களை எழுப்பியதை ஊழியரணி மேம்பாட்டு நிபுணர்கள் சுட்டிக்காட்டினர்.

இன்னும் சுமார் இரண்டு மாதத்துக்கும் குறைவான காலமே எஞ்சியுள்ள நிலையில், பத்து பேரில் ஏழு பேர் இன்னும் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் உதவித்தொகையைப் பயன்படுத்தவில்லை என்று ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் வரை, 778,500க்கும் மேற்பட்டோர் ஒரு முறை வழங்கப்படும் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் உதவித்தொகையைப் பயன்படுத்தியுள்ளனர். 40 முதல் 60 வயதுடைய பணியிடைக்கால ஊழியர்கள் இந்த எண்ணிக்கையில் கிட்டத்தட்ட பாதி பேர் உள்ளனர்.

தகவல் மற்றும் தொடர்பு, உணவு சேவைகள், விளம்பரம், விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் ஆகிய பயிற்சிகள் பிரபலமான துறைகளில் அடங்கும்.

கொவிட்-19 பெருந்தொற்றுநோய்க்கு மத்தியில், 2020ஆம் ஆண்டில் 25 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சிங்கப்பூரர்களுக்கு ஒரே முறை நிரப்புத் தொகை வழங்கப்பட்டது. மைஸ்கில்ஸ்ஃபியூச்சர் இணையத் தளத்தில் தகுதியான பயிற்சிப் படிப்புகளுக்கான கட்டணங்களை ஈடுசெய்ய ஸ்கில்ஸ்ஃபியூச்சர் உதவித்தொகையைப் பயன்படுத்தலாம்.

காலக்கெடுவை நீட்டிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பு தெரிவித்துள்ளது. ஒருமுறை கொடுக்கப்படும் உதவித்தொகையைப் பயன்படுத்த எண்ணும் ஊழியர்கள், தங்கள் பயிற்சிப் படிப்புகளைத் தொடங்கி, அதற்கான கட்டணக் கோரிக்கைகளை டிசம்பர் 31க்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்