தாய்லாந்தின் முன்னாள் அரசியாருக்கு மூத்த அமைச்சர் லீ அஞ்சலி

2 mins read
5d99d645-4d2f-4f96-9a61-1be58a51e191
அண்மையில் காலமான தாய்லாந்தின் முன்னாள் அரசியார் ராஜமாதா சிரிகிட்டுக்கு அஞ்சலி செலுத்தும் மூத்த அமைச்சர் லீ சியன் லூங், திருமதி லீ. - படம்: தாய்லாந்து அரச குடும்பத்தின் பணியகம்

அண்மையில் காலமான தாய்லாந்தின் முன்னாள் அரசியார் ராஜமாதா சிரிகிட்டுக்கு அஞ்சலி செலுத்தும் பொருட்டு, திங்கட்கிழமை (நவம்பர் 3) மூத்த அமைச்சர் லீ சியன் லூங்கும் அவரது துணைவியாரும் ஒரு நாள் பயணமாக பேங்காக்குக்குச் சென்றனர்.

அதன் தொடர்பில் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட திரு லீ, “நான் கடைசியாக 2009ஆம் ஆண்டு தாய்லாந்து ஹுவா ஹின் நகரில் 14வது ஆசியான் உச்சநிலை மாநாட்டை நடத்தியபோது, ​​ராஜமாதா முன்னாள் அரசியாரைச் சந்தித்தேன். அவர் தமது மறைந்த கணவர் மன்னர் பூமிபோன் தாய்லாந்து மக்கள் மீது வைத்திருந்த இரக்கத்தையும் பக்தியையும் பகிர்ந்துகொண்டார்.

“சுகாதாரம், சுற்றுப்புறம், கலாசாரம் ஆகிய துறைகளில் ஏராளமான அரசத் திட்டங்களுக்கு முன்னாள் அரசியார் தீவிர ஆதரவாளராக இருந்தார். மேலும் தாய்லாந்து மக்களின் நல்வாழ்வில் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் இருந்தார். தாய்லாந்துக்கு முன்னாள் அரசியாரின் வாழ்நாள் சேவையின் மரபு, தாய்லாந்துக்கும் உலகிற்கும் ஓர் உத்வேகமாக நீண்டகாலம் இருக்கும் என்பதில் ஐயமில்லை,” என்று குறிப்பிட்டிருந்தார்.

“ஹோ சிங்கும் நானும், தாய்லாந்து மன்னர், அரச குடும்பத்தினர், தாய்லாந்து மக்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த இழப்பின்போது, ​​சிங்கப்பூர் தாய்லாந்துடன் ஒற்றுமையாக நிற்கிறது. ராஜமாதாவின் ஆன்மா சாந்தியடையட்டும்,” என்றும் திரு லீ பதிவிட்டிருந்தார்.

மேலும் தாய்லாந்துப் பிரதமர் அனுட்டின் சார்ன்விரக்குல்லை மீண்டும் சந்தித்ததில் மகிழ்ச்சி தெரிவித்தார் திரு லீ. 2022ஆம் ஆண்டு தாய்லாந்து ஏபெக் மாநாட்டுக்குத் தலைமை வகித்தபோது திரு அனுட்டின்னைக் கடைசியாக பேங்காக்கில் சந்தித்தாக மூத்த அமைச்சர் தெரிவித்தார்.

“பொதுவான நலன்களைக் கொண்ட துறைகளில், குறிப்பாக மின்னிலக்கம், பசுமைப் பொருளியல்களில், சிங்கப்பூரும் தாய்லாந்தும் தங்கள் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான வலுவான ஆற்றல் உள்ளது. சிங்கப்பூருக்கும் தாய்லாந்திற்கும் இடையிலான உறவுகள் வலுவானவை. மேலும் இந்தப் பங்காளித்துவத்தை மேலும் வலுப்படுத்த இருநாடுகளும் விரும்புகின்றன,” என்றும் திரு லீ ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்