தமது 79 வயது தாயாரைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆடவர், சம்பவம் நடந்த இடத்துக்கு வெள்ளிக்கிழமை (ஜூலை 4) காவல்துறை அதிகாரிகளால் கொண்டு செல்லப்பட்டார்.
காலை 9.30 மணி அளவில் செங்காங் வட்டாரத்தில் உள்ள புளோக் 465 ஃபேர்ன்வேல் சாலையில் உள்ள வீட்டுக்கு 44 வயது லிம் யுவேன் லீ கொண்டு செல்லப்பட்டார்.
அப்போது அவரது கைகளுக்கும் கால்களுக்கும் விலங்கு மாட்டப்பட்டிருந்தது.
திருவாட்டி வாங் ஹாவ் கியூவைக் கொன்றதாக லிம் மீது ஜூன் 3ஆம் தேதியன்று குற்றம் சாட்டப்பட்டது.
மாண்டவரின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள லிம் நீதிமன்றத்திடம் அனுமதி கோரியிருந்தார். மாண்டவரை அவர் தமது தாயார் என்று குறிப்பிடவில்லை.
திருவாட்டி வாங்கின் இறுதிச் சடங்கிற்கு லிம் செல்லவில்லை என்று அறியப்படுவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்தது.
ஜூன் 1ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கும் காலை 10.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் 11வது மாடியில் உள்ள வீட்டில் திருவாட்டி வாங்கை லிம் கொன்றதாக நம்பப்படுகிறது.
இந்நிலையில் ஜூலை 4ஆம் தேதியன்று சிவப்பு நிற போலோ டீ-சட்டையும் கறுப்பு அரைக்கால் காற்சட்டையும் செருப்புகளும் அணிந்துகொண்டு சம்பவ இடத்துக்கு லிம் திரும்பினார்.
தொடர்புடைய செய்திகள்
11 மாடியில் உள்ள மின்தூக்கித் தளத்தைச் சுற்றி காவல்துறையினர் தடுப்பு போட்டனர்.
வீட்டிற்கு வெளியே காவல்துறை அதிகாரிகளிடம் லிம் பேசினார். பிறகு சம்பவம் நிகழ்ந்த பிறகு, முதல்முறையாக அவர் அந்த வீட்டிற்குள் நுழைந்தார்.
பொதுத் தாழ்வாரத்தில் காவல்துறை அதிகாரிகள் இருவர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். சம்பவம் நடந்த வீட்டில் தடயவியல் நிபுணர்கள் விசாரணை நடத்தினர்.
பிற்பகல் 12.50 மணி அளவில் லிம் வீட்டைவிட்டு வெளியேறினார். காவல்துறை வாகனத்துக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். லிம்முக்குச் சொந்தமான பொருள்களைக் கொண்ட பிளாஸ்டிக் பையை காவல்துறை அதிகாரி ஒருவர் தூக்கிக்கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படலாம்.