செம்பவாங் வட்டாரத்தில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக அடுக்குமாடி வீடொன்றில் தீப்பற்றியதைத் தொடர்ந்து, இருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
செம்பவாங் கிரசென்ட்டில் இருக்கும் புளோக் ‘362A’ன் மூன்றாம் தளத்தில் உள்ள ஒரு வீட்டில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 21) நெருப்புப் பற்றியது.
காலை 8.15 மணியளவில் அது குறித்துத் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
படுக்கையறையில் தீப்பற்றியதாகவும் தண்ணீரைப் பீய்ச்சியடித்து நெருப்பை அணைத்ததாகவும் அது கூறியது.
புகையை நுகர்ந்திருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் இருவர் சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏறக்குறைய 50 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டதாகக் குடிமைத் தற்காப்புப் படை சொன்னது.
நெருப்புப் பற்றியதற்கான காரணம் விசாரிக்கப்படுகிறது.
சென்ற ஆண்டு (2024), வீடுகளில் தீப்பிடித்த சம்பவங்களின் எண்ணிக்கை 968ஆக இருந்தது. முந்திய ஆண்டின் எண்ணிக்கைக்கு நிகரானது அது. அப்போது 970 தீச்சம்பவங்கள் பதிவாயின.
தொடர்புடைய செய்திகள்
சமையல் செய்யும்போது கவனிக்காமல் விட்டுச்செல்வதால் தீ ஏற்படக்கூடிய சாத்தியம் அதிகம். அதே போன்று மின்கம்பிக் கோளாறுகளாலும் மின்-இணைப்புகளில் அளவுக்கு அதிகமான சாதனங்கள் பொருத்தப்படுவதாலும் நெருப்புப் பற்றக்கூடும். வீட்டுத் தீச்சம்பவங்களுக்குத் தொடர்ந்து அவை இரண்டுமே முக்கியக் காரணங்களாக இருக்கின்றன.

