தொண்டூழியத்தை நேரம் கிடைக்கும்போது செய்யும் தனிப்பட்ட நடவடிக்கையாகப் பார்க்காமல், சிங்கப்பூரர் எனும் மரபணுவில் முக்கிய அங்கமாகவும் மக்கள் காண வேண்டும் என்று பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா வலியுறுத்தியுள்ளார்.
இரண்டாம் ஆண்டாக நடைபெற்ற ‘சிண்டா தொண்டூழியத் திருவிழா’வில் பேசிய சிண்டாவின் தலைவருமான இந்திராணி ராஜா அவ்வாறு கூறினார்.
“பலவற்றையும் சாதிக்கும் நாடாக நாம் வளர விரும்புகிறோம். ஒவ்வொரு தனிமனிதனுக்கும் இதில் பங்கு உண்டு. அனைத்துமே சம்பளத்துக்காகச் செய்யும் பணியாக இருக்கத் தேவையில்லை.
“நாம் ஒரு சிறு நாடு. நமக்கு அவ்வளவாக வளங்கள் இல்லை. அரசாங்கத்துக்கு நிறைய வளங்கள் உள்ளன என்று மக்கள் சொல்லலாம். ஆனால், அவற்றை நமக்குள்ள தேவைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். எடுத்துக்காட்டாக, கடலோரப் பாதுகாப்புக்கே நமக்குப் பில்லியன்கணக்கில் செலவாகிறது. சாங்கி முனையம் ஐந்துக்கான செலவும் உள்ளது,” என்று அவர் விளக்கினார்.
இவ்வாண்டு 600க்கும் மேற்பட்ட சிண்டா தொண்டூழியர்கள் 12 திட்டங்களில் 3,410 மணி நேரம் சேவையாற்றியுள்ளனர்.
“சென்ற ஆண்டு 400க்கும் மேற்பட்ட தொண்டூழியர்கள் சிண்டாவில் சேவையாற்றினர். இவ்வாண்டு தொண்டூழியர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதற்கு நிறைய நிறுவனங்கள் நம்முடன் இணைந்துள்ளதே காரணம்,” என்று சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன் கூறினார்.
“சிண்டாவின் முதுகெலும்பு தொண்டூழியர்களே. 1992ல் சிண்டா அமைக்கப்பட்டபோது சில தொண்டூழியர்கள் மட்டும்தான் இருந்தனர். இன்று சிண்டா வளர்ந்துள்ளது. இன்று நாம் இந்தியச் சமூகத்திற்கு முக்கிய அமைப்பாகத் திகழ்கிறோம்,” என்றார் திரு அன்பரசு.
அமைச்சர் இந்திராணி தமது உரையில் தொண்டூழியர் இருவரின் பயணங்களைச் சுட்டினார்.
அவர்களில் முதலாமவர், 2021ல் தன் சிண்டா தொண்டூழியப் பயணத்தைத் தொடங்கிய சடேஸ் குமார் நேரு, 39.
“புக் விசர்ட்ஸ், நேரடி இல்ல வருகை, முதியோர் ஈடுபாட்டு நிகழ்ச்சிகள், ‘மென்டோர் மீ’ போன்றவற்றில் சடேஸ் குமார் ஈடுபட்டுள்ளார். கடந்த ஈராண்டுகளாக அவர் வாரந்தோறும் ஆறு வயதுச் சிறுவன் ஒருவனுக்குப் புத்தகம் வாசித்துக் காட்டுகிறார்.
“அச்சிறுவன் ஒரு வாரம்கூட வாசித்தலைத் தவறவிடக்கூடாதெனத் தமக்குப் பிள்ளை பிறந்த ஒரு வாரத்திலேயே வாசித்தலுக்கு வந்தார் சடேஸ் குமார்,” எனப் பாராட்டினார் குமாரி இந்திராணி.
இரண்டாவதாக, செவித்திறன் குறைபாடுள்ள முகம்மது முஸ்தாக் வஃபீக், தான் எதிர்கொள்ளும் சவால்களுக்கும் அப்பால் சமூகத்தினரின் சவால்களைப் பற்றிச் சிந்தித்துப் பங்காற்றி வருவதைச் சுட்டிக்காட்டி அமைச்சர் பாராட்டினார்.
கடந்த இருபது ஆண்டுகளில் தொண்டூழியத்துக்கான வாய்ப்புகள் பெரிதும் வளர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சிண்டா போன்ற சுய உதவிக் குழுக்கள், தேசிய இளையர் மன்றம் போன்றவை இந்த வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ள நிலையில், முதியோருக்கான தொண்டூழியமும் தோன்றியுள்ளதாக அமைச்சர் கூறினார். “ஓய்வுபெற்றபின் உண்மையில் புதிய உலகமே பிறக்கிறது,” என்றார் அவர்.
“நெருக்கமாக உள்ள சமூகத்திலும் தனிமை இன்று நிலைக்கிறது. ஆனால், தொண்டூழியம் புரியும்போது அது பறந்துபோய்விடுகிறது. சிண்டாவின் நேரடி இல்ல வருகை நடவடிக்கையின்மூலம், சிண்டா தொண்டூழியர் தம்மைக் காண வரும்போது தனியாக வாழும் முதியோர் பெரிதும் மகிழ்ச்சி அடைகின்றனர்,” என்று அமைச்சர் சொன்னார்.
தொண்டூழியத் திட்டங்களின் நீடித்த நிலைத்தன்மை முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“நிதி எங்கிருந்து வரும்? அரசாங்கத்திடமிருந்தா? தனியாரிடமிருந்தா? எத்தனைப் பயனாளிகள் உள்ளனர்? என்பன போன்றவை குறித்துச் சிந்தியுங்கள்,” என்று அவர் கேட்டுக்கொண்டார்
தொடர்ந்து அத்திட்டங்கள் பயனுள்ளதாக இருக்கும் வகையில் புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

