தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டெக்சஸ் வெள்ளத்தில் தேடல் பணிகள் தீவிரம்: 78 பேர் பலியானது உறுதி

2 mins read
af86c5b6-13f9-4944-965f-20bf7e49b027
டெக்சஸ் மாநிலத்தைப் புரட்டிப்போட்ட வெள்ளத்தில் காணாமற்போனவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. - படம்: ஏஎஃப்பி

கேர்வில், டெக்சஸ்: அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தைப் புரட்டிப்போட்ட வெள்ளத்தில் தேடல், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. 78 பேரைப் பலிவாங்கிய வெள்ளத்தில் பலரை இன்னமும் காணவில்லை.

ஹில் கன்ட்ரி டெக்சஸ் பகுதியிலிருந்து அதிகமானோர் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் மாண்டனர். மாண்டோரில் 68 பேர் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள். அவர்களில் 28 பேர் பிள்ளைகள்.

ஒரு மணி நேரத்துக்கும் குறைவாக மளமளவென பெருக்கெடுத்த குவாடலுப் ஆறு, கேர்வில் பகுதியைக் கடந்து செல்கிறது.

அந்த ஆற்றுக்கு அருகே கிட்டத்தட்ட நூறாண்டு பழமையான பெண்களுக்கான கிறிஸ்தவ முகாமில் உள்ள சிறுமிகள் வெள்ளத்தில் மாண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடுமையான மழையால் குவாடலுப் ஆறு கரைபுரண்டது.
கடுமையான மழையால் குவாடலுப் ஆறு கரைபுரண்டது. - படம்: ஏஎஃப்பி

காணாமற்போன 10 சிறுமிகளையும் முகாம் ஆலோசகரையும் தேடிவருவதாக ஞாயிற்றுக்கிழமை அதிகாரிகள் கூறினர். ஏற்கெனவே காணாமற்போனதாக நம்பப்படுவோர் குறித்து எந்தத் தகவலும் வெளியிடப்பட்டவில்லை.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நிலவரப்படி டெக்சஸ் மாநிலத்தில் உள்ள தெற்கு, மத்திய பகுதிகளில் மேலும் 10 பேர் வெள்ளத்தால் மாண்டதை அதிகாரிகள் உறுதிபடுத்தினர். 41 பேரின் நிலைமை என்னவென்று தெரியவில்லை.

வெள்ளநீர் வடியத் தொடங்கியதை அடுத்து தேடல் பணிகள் தீவிரமடைந்துள்ளதால் மாண்டோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று டெக்சஸ் பொதுப் பாதுகாப்புத் துறை இயக்குநர் ஃப்ரீமன் மார்டின் கூறினார்.

வெள்ளிக்கிழமை பெய்த மழையைவிட லேசான மழை தொடர்ந்து பெய்தால் திடீர் வெள்ளங்கள் மீண்டும் பெருகக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.

‘ஜூலை ஃபோர்த்’ (July Fourth) விடுமுறைக்கு முன் மத்திய டெக்சஸின் சில பகுதிகளில் கடுமையான மழை பெய்யும் என்றும் திடீர் வெள்ளங்கள் ஏற்படும் என்றும் அவசரநிலை நிர்வாக அதிகாரிகள் கடந்த வியாழக்கிழமை எச்சரித்தனர்.

வெள்ளத்தால் ஏற்பட்ட இடிபாடுகள்
வெள்ளத்தால் ஏற்பட்ட இடிபாடுகள் - படம்: ஏஎஃப்பி

இதற்கிடையே, தேடல், மீட்புப் பணிகளில் நூற்றுக்கணக்கான அவசரநிலை ஊழியர்கள் பல சவால்களுக்கு இடையே ஈடுபட்டுள்ளனர்.

“வெப்பம் அதிகமாக இருக்கிறது. எங்கும் சேறு. இடிபாடுகளை நீக்கினால் பாம்புகள் இருக்கின்றன,” என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

இதுவரை 850க்கும் அதிகமானோர் மீட்கப்பட்டுள்ளனர். கடுமையான புயலால் 38 சென்டிமீட்டர் மழை பெருக்கெடுத்ததை அடுத்து பலர் உயிர்தப்பிக்க மரங்களில் ஏறியதை அதிகாரிகள் கூறினர்.

வெள்ளத்தில் மாண்டோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.
வெள்ளத்தில் மாண்டோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் அஞ்சுகின்றனர். - படம்: ஏஎஃப்பி
குறிப்புச் சொற்கள்