மின்சைக்கிள் ஒன்றின்மீது மோதிய காரை ஓட்டியவர் தேடப்பட்டு வருகிறார்.
சம்பவத்துக்குப் பிறகு அந்த ஓட்டுநர் காரில் நிற்காமல் சென்றிருக்கிறார். இச்சம்பவம் சனிக்கிழமை (நவம்பர் 21) பிற்பகல் அப்பர் தாம்சன் ரோட்டில் நிகழ்ந்தது.
மெக்ரிட்சி பாலத்தை நோக்கிய அப்பர் தாம்சன் ரோட்டில் நிகழ்ந்த இச்சம்பவம் குறித்து சனிக்கிழமை பிற்பகல் மூன்று மணியளவில் காவல்துறைக்குத் தகவல் வந்தது. விபத்துக்கு ஆளான 27 வயது மின்சைக்கிளோட்டி சுயநினைவுடன் உட்லண்ட்ஸ் சுகாதார வளாகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
“கார் ஓட்டுநரை அடையாளம் காணும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன,” என்று கூறிய காவல்துறை விசாரணை தொடர்வதாகவும் குறிப்பிட்டது.
எஸ்ஜி ரோடு விஜிலான்டே ஃபேஸ்புக் பக்கத்தில் இடம்பெற்றுள்ள பதிவின்படி காயமடைந்த மின்சைக்கிளோட்டி ஓர் உணவு விநியோக ஓட்டுநர் என்பது தெரிகிறது. அப்பதிவில் இடம்பெற்றுள்ள படங்களில் ஒன்றில் அவரின் முகத்தில் ரத்தம் வழிந்துகொண்டிருந்ததும் அவரின் மின்சைக்கிள் தரையில் இருந்ததும் தெரிந்தன. மின்சைக்கிளுக்கு அருகே தலைக்கவசமும் உணவு வைக்கப்படும் பையும் காணப்பட்டன.
வேறொரு படத்தில் அவரின் தலையில் கட்டு போடப்பட்டிருந்ததும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்த மருத்துவ உதவியாளர்கள் மூவர் அவருக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தும் தெரிந்தன.

