ஸ்கூட் விமானச் சேவை நிறுவனம் வியட்னாமின் டா நாங், நா டிராங் ஆகிய நகரங்களுக்கும் மலேசியாவின் கிளந்தான் மாநிலத் தலைநகர் கோத்தா பாருவுக்கும் விமானச் சேவையைத் தொடங்கியுள்ளது. இதுகுறித்து ஸ்கூட் வியாழக்கிழமையன்று (ஜூலை 3) அறிவித்தது.
இவ்வாண்டு அக்டோபர் மாதத்துக்கும் நவம்பர் மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் புதிய பயணப் பாதைகளில் விமானச் சேவைகள் படிப்படியாகத் தொடங்கும்.
ஜப்பானின் ஒக்கினாவாவுக்கும் இந்தோனீசியாவின் மேடான் மற்றும் லாபுவான் பாஜோவுக்கும் விமானச் சேவைகளை ஸ்கூட் வழங்க இருக்கிறது. இதற்கான ஒப்புதலுக்காக ஸ்கூட் காத்திருக்கிறது.
சாங்கி விமான நிலையத்திலிருந்து ஒக்கினாவா மற்றும் வாபுவான் பாஜோவுக்கு தற்போது ஜெட்ஸ்டார் ஏஷியா விமானச் சேவை வழங்குகிறது. ஜூலை 31ஆம் தேதியிலிருந்து ஜெட்ஸ்டார் ஏஷியா விமானச் சேவை நிறுவனம் அதன் செயல்பாடுகளை முடித்துக்கொள்கிறது.
டா நாங் நகருக்கு விமானச் சேவைகளை அக்டோபர் 20லிருந்து ஸ்கூட் தொடங்குகிறது. முதலில் வாரத்துக்கு மூன்று முறை சேவை வழங்கப்படும். பிறகு டிசம்பர் மாதத்துக்குள் சேவை நாள்கள் படிப்படியாக உயர்த்தப்படும். ஒருவழி வர்த்தக வகுப்புப் பயணச்சீட்டுக்கான விலை (வரிகள் சேர்த்து) $115லிருந்து தொடங்கும்.
நா டிராங் நகருக்கு விமானச் சேவைகள் நவம்பர் மாதம் 21ஆம் தேதியிலிருந்து தொடங்கும். வாரத்துக்கு இரு நாள்கள் சேவை வழங்கப்படும். சேவைகளின் எண்ணிக்கை 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் படிப்படியாக வாரத்துக்கு ஐந்து நாள்களாக அதிகரிக்கப்படும்.
ஒருவழி (வரிகள் சேர்த்து) பயணச்சீட்டுகளுக்கான விலை $135.
அக்டோபர் 26ஆம் தேதியிலிருந்து கோத்தா பாருவுக்கு ஸ்கூட் இருமுறை விமானச் சேவை நடத்தும். ஒருவழி (வரிகள் சேர்த்து) பயணச்சீட்டுகளுக்கான விலை $78லிருந்து தொடங்கும்.
தொடர்புடைய செய்திகள்
பயணச்சீட்டுகளை ஸ்கூட்டின் இணையப்பக்கம் மற்றும் கைப்பேசிச் செயலி மூலம் வாங்கலாம்.