இளையர்களிடையே கலை, வர்த்தகம், தொழில்நுட்ப ஆற்றலை ஊக்குவிக்கும் ஒரு வளாகமாக ஆர்ச்சட் சாலையில் திகழும் ‘ஸ்கேப்’ இவ்வாண்டு இறுதிக்குள் பொதுப் பயன்பாட்டுக்குத் தயாராகும்.
இளையர் மேம்பாட்டுக்குப் பங்களிக்கும் தனியார், பொதுத்துறை பங்காளித்துவர்களுடன் இணைந்து வளாகத்தில் பல மாற்றங்களை அறிமுகப்படுத்துவதாக ஜூலை 1ஆம் தேதி நடைபெற்ற ஊடக சந்திப்பில் ‘ஸ்கேப்’ தெரிவித்தது.
‘பெரிய லட்சியங்களைக் கொண்ட இளையர்களுக்கான வளங்கள் அல்லது குறைந்தபட்சம் சில வழிகாட்டிகள் அணுகும் இடமாக ‘ஸ்கேப்’ இருக்கவேண்டும் என்பது நமது இலக்கு,” என்றார் ‘ஸ்கேப்’ வளாகத்தின் துணை நிர்வாக இயக்குநர் ஈதன் ஓங்.
புதுப்பிக்கப்படும் ‘ஸ்கேப்’ வளாகம் அதிக இளையர் நடவடிக்கைகளுக்கு இடங்கொடுக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார் திரு ஓங்.
தற்போது ஏறத்தாழ 10 பங்காளித்துவர்கள் வளாகத்துடன் கைகோத்து இளையர் வளர்ச்சியில் ஈடுபடுவர் என்று தெரிவிக்கப்பட்டது. அதில் அறுவர் புதியவர்கள்.
இளையர்களுக்கான மனநல ஆலோசனை மையம், ‘கே பாப்’ இசைப் பயிற்சி அகாடமி, போன்ற அமைப்புகளைப் புதிய வளாகத்தில் காணலாம்.
‘ஸ்கேப்’ வளாகத்தின் நீண்டகாலப் பங்காளித்துவர்களில் ஒன்றான ‘மஜேஸ்’ தனியார் கல்வி நிறுவனம் தன் சேவைகளை புதுப்பிக்கப்பட்ட வளாகத்தில் தொடரும்.
தற்போது இளையர்கள் செயற்கை நுண்ணறிவு சார்ந்த கல்வி வாய்ப்புகளை அதிகம் நாடுவதுண்டு என்று தெரிவித்தார் நிறுவனத்தின் கல்விசார் இயக்குநர் ராஜேஷ் சக்கரவர்த்தி, 50.
தொடர்புடைய செய்திகள்
“கலை மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த கல்வி வாய்ப்புகளும் பெரும்பாலும் இளையர்களை ஈர்ப்பதுண்டு,” என்றார்.
கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளாக ஸ்கேப் வளாகத்துடன் இணைந்து செயலாற்றிவரும் ‘மஜேஸ்’ நிறுவனம், புதுப்பிக்கப்பட்ட வளாகத்தில் மீண்டும் இடம்பெறுவது ஓர் உற்சாகமான தருணம் என்றார் திரு ராஜேஷ்.
“இளையர்கள் மட்டுமல்லாமல் வேலை செய்யும் பெரியவர்களும்கூட இந்த வளாகத்தையும் அதன் வளங்களையும் பயன்படுத்தலாம்,” என்று அவர் வரவேற்றார்.
மேலும் சில உறுதி செய்யப்பட்ட பங்குதாரர்கள் நாளடைவில் அறிமுகம் காணவுள்ளனர் என்றும் கூறப்பட்டது.
அத்துடன், புதுபிக்கப்படும் ‘ஸ்கேப்’ வளாகம் செல்லப் பிராணிகளுக்கும் உகந்ததாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.