‘என்ஆர்ஐசி’ மின்வடிவங்களை மாற்றியமைத்துப் பயன்படுத்தும் மோசடிக்காரர்கள்: காவல்துறை

1 mins read
e2d51a13-920a-419a-a727-bc0b98e32a1d
கோப்புப் படம்: - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மோசடிக்காரர்கள் இப்போது என்ஆர்ஐசி அடையாள அட்டையின் மின் வடிவங்களை மாற்றியமைத்து சட்டவிரோதச் செயல்களுக்காகப் பயன்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு அடையாள அட்டைகளின் மின்வடிவங்களை மாற்றியமைத்து மோசடிக்காரர்கள் கட்டணம் செலுத்துவதற்கான தளங்களில் கணக்குகளைத் திறப்பதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. மோசடிக்காரர்கள் அடையாள அட்டையின் மின்வடிவத்தில் உள்ள சம்பந்தப்பட்ட நபரின் படத்தை மாற்றுகின்றனர் என்று காவல்துறையினர் இந்தப் புதியவகை மோசடி குறித்து புதன்கிழமை (நவம்பர் 12) எச்சரித்தனர்.

கட்டணத் தளங்கள், மாற்றப்பட்ட அடையாள அட்டையை உறுதிப்படுத்துமாறு கேட்கும்போது மோசடிக்காரர், அதற்குச் சொந்தக்காராக வேறொருவரை ‘நியமிப்பர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு சட்டவிரோதச் செயல்களை மேற்கொள்வதற்கான கணக்குகள் அமைக்கப்படுகின்றன.

மாற்றியமைக்கப்பட்ட அடையாள அட்டைகள் சில, ஏற்கெனவே மோசடிக்காரர்களிடம் ஏமாறியவர்களுக்குச் சொந்தமானவை என்று காவல்துறை குறிப்பிட்டது.

இதனால் பாதிக்கப்பட்டுள்ள கட்டணத் தளங்கள் தங்களின் மோசடித் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட தளங்கள் யாவை என்பதைக் காவல்துறை தெரிவிக்கவில்லை.

ஏமாற்றும் நோக்கத்துடன் போலி ஆவணத்தைத் தயார்செய்த அல்லது மின்பதிவுகளை மாற்றியமைத்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு 10 ஆண்டு வரையிலான சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம் என்று காவல்துறை சுட்டியது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்