சிங்கப்பூரில் வேலை செய்யும் 7,600க்கும் மேற்பட்ட பாதுகாவல் அதிகாரிகளுக்கு அடுத்த ஆண்டு (2026) ஜனவரி முதல்தேதியிலிருந்து சம்பள உயர்வு கிடைக்கவிருக்கிறது.
தனியார் பாதுகாவல் துறையினருக்கான படிப்படியாக உயரும் சம்பள முறையின்கீழ் அது நடைமுறைப்படுத்தப்படும்.
பாதுகாவல் அதிகாரிகள், 2026 ஜனவரி 1 முதல் 2028 டிசம்பர் 31 வரை, ஆண்டுக்கு $160 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
பாதுகாவல் முத்தரப்புக் குழுமம் முன்வைத்த பரிந்துரைகளின் அடிப்படையில் படிப்படியான சம்பள உயர்வுகள் அமைந்துள்ளன. அரசாங்கம், உள்துறை அமைச்சு, மனிதவள அமைச்சு ஆகியவை அவற்றை ஏற்றுக்கொண்டுள்ளன. அவை வியாழக்கிழமை (அக்டோபர் 30) வெளியிட்ட கூட்டறிக்கையில் அந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
அடுத்த ஆண்டு ஜனவரியிலிருந்து ஏறக்குறைய 1,500 முழுநேரப் பாதுகாவல் அதிகாரிகளின் சம்பளம், குறைந்தது 2,475க்கு உயர்த்தப்படும். புதிதாகச் சேர்வோருக்கு, படிப்படியாக உயரும் சம்பள முறையின்கீழ் கொடுக்கப்படும் ஊதியம் அது.
அவர்களின் குறைந்தபட்ச மாதச் சம்பளம் 2027ல் $2,635க்கும் 2028ல் $2,795க்கும் அதிகரிக்கப்படும்.
அடுத்த ஆண்டிலிருந்து மூத்த பாதுகாவல் அதிகாரிகளின் மாதச் சம்பளம் குறைந்தது $2,675ஆக இருக்கும். அதே போன்று பாதுகாவல் மேற்பார்வையாளர்களின் மாத ஊதியம், $2,905க்குக் கூட்டப்படும்.
தொடர்புடைய செய்திகள்
அந்த ஊதியங்கள் மீண்டும் 2027லும் 2028லும் உயர்த்தப்படும்.
2028 ஜனவரி 1 முதல், படிப்படியாக உயரும் சம்பள முறையின்கீழ் வழங்கப்படவிருக்கும் ஊதியம் குறித்த மறுஆய்வு, 2027ல் மேற்கொள்ளப்படும்.


