பாதுகாப்பு, சுகாதாரக் குறைபாடு

500 பணியிடங்களில் சோதனை; $165,100 அபராதம் விதிப்பு

2 mins read
ee0aaf2f-b907-402f-b461-75b05cc77ce8
நிலைத்தன்மையற்ற எஃகு (ஸ்டீல்) தடங்கள், குப்பைகளால் மறைக்கப்பட்ட பாதைகள், ஈரமான சமையலறைத் தரை போன்றவை பாதுகாப்பற்ற நடைமுறைகளில் அடங்கும். - படம்: மனிதவள அமைச்சு ஃபேஸ்புக் பதிவு

ஜுன் மாதம் முதல் ஆகஸ்ட் வரையில் பணியிடங்களில் நடந்த பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் சார்ந்த சோதனைகளில் நிறுவனங்களுக்கு $165,100 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இரண்டு வேலை நிறுத்த ஆணைகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன என்று மனிதவள அமைச்சு செப்டம்பர் 25 (வியாழக்கிழமை) ஃபேஸ்புக் பதிவொன்றில் தெரிவித்தது.

சோதனைகள் நடத்தப்பட்ட 500 பணியிடங்களில் 1,253 பாதுகாப்பற்ற நடைமுறைகள் பதிவாகியுள்ளன. நிலைத்தன்மையற்ற எஃகு (ஸ்டீல்) தடங்கள், குப்பைகளால் மறைக்கப்பட்ட பாதைகள், ஈரமான சமையலறைத் தரை போன்றவை பதிவுகளில் அடங்கும்.

ஊழியர்கள் அணிந்திருந்த காலணிகள் தரையுடன் பிடிப்புத்தன்மையற்று பாதுகாப்பற்றவையாக இருந்தன. அவை “தடுக்கி, வழுக்கி விழும்” அபாயத்தை ஏற்படுத்தக்கூடியவை என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.

“இத்தகைய குறைபாடுகள் ஊழியர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றன. கட்டுமானம், உற்பத்தித்துறை, நீர் மற்றும் கடல் சார்ந்த பணிகள், போக்குவரத்து, சரக்குக் கிடங்கு போன்ற துறைகளில் பணியாற்றுவோர் அவற்றால் அதிகம் பாதிக்கப்படுவார்கள்,” என்று மனிதவள அமைச்சு குறிப்பிட்டது.

தடுக்குதல், வழுக்குதல், கீழே விழுதல் ஆகிய சம்பவங்கள், பணியிடங்களில் ஏற்பட்ட காயங்களின் மொத்த எண்ணிக்கையில் 2024ஆம் ஆண்டில் மூன்றில் ஒரு பங்கு வகித்தன.

மனிதவள அமைச்சின் 2024ஆம் ஆண்டுக்கான வேலையிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிலவர அறிக்கையில், 43 மரணங்கள், 587 பெரிய காயங்கள் ஏற்பட்ட சம்பவங்கள் பணியிடங்களில் நடந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. உடல் உறுப்புகள் துண்டிப்பு, பார்வை மற்றும் கேட்கும் திறன் இழப்பது, பக்கவாதம் போன்றவை பெரிய காயங்களாக அமைச்சால் குறிப்பிடப்பட்டுள்ளன.

நிலையான எஃகு தடங்கள், தடைகளற்ற நடைபாதைகள், வழுக்கும் தன்மை இல்லாத மேற்பரப்புகளுடன் சரிவுப் பாதைகளைப் பொருத்துதல், ஆபத்து அதிகம் உள்ள இடங்களில் வழுக்குவதைத் தடுக்கும் விரிப்புகளை வைத்தல் ஆகிய பாதுகாப்பு அம்சங்கள் பணியிடங்களில் இருப்பதை உறுதி செய்யும்படி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

ஏப்ரல் முதல் ஜுன் வரையில், 514 பணியிடச் சோதனைகளுக்குப் பிறகு, அமைச்சு $230,100 மதிப்புள்ள அபராதங்களை விதித்து, மூன்று வேலை நிறுத்த ஆணைகளையும் பிறப்பித்துள்ளதாக அறிவித்துள்ளது. அவற்றில் 1,263 பாதுகாப்புக் குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

பாதுகாப்பற்ற நடவடிக்கைகள் பற்றிய புகார்களை go.gov.sg/snapsafe எனும் இணையப் பக்கத்தில் பதிவேற்றலாம்.

குறிப்புச் சொற்கள்