பங்ளாதேஷ் ஆடவரை அடித்து உதைத்து வழிப்பறியில் ஈடுபட்ட வெளிநாட்டு ஆடவர்கள்

2 mins read
கொள்ளையர் ஐவரில் ஒருவருக்குச் சிறை, பிரம்படி
a67a93f8-90a0-4e06-876f-eb47d8d03b47
காலாங் விளையாட்டரங்கத்திற்கு அருகே வழிப்பறியில் ஈடுபட்ட ஐவரும், பிலால் மின்ஸ்கூட்டரைத் திருடியதாகக் கூறி அடித்து, உதைத்ததுடன் $1,000 பிணைத்தொகை கேட்டு மிரட்டினர். - படம்: பிக்சாபே

பங்ளாதேஷைச் சேர்ந்தவர் 40 வயது ஹுசைன் பிலால் எனும் ஆடவர்.

காலாங் விளையாட்டரங்கிற்கு அருகே 2024 பிப்ரவரி 12ஆம் தேதி அவரை அடித்து, உதைத்ததாக வெளிநாட்டு ஆடவர் ஐவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

பிலால் மின்ஸ்கூட்டரைத் திருடியதாகக் கூறி அவரைத் துன்புறுத்திய அவர்கள் $1,000 பிணைத்தொகை கேட்டு மிரட்டியதாகவும் தெரிகிறது.

ஐவரில் ஒருவரான 30 வயது சர்க்கெர் சுமோனுக்கு வியாழக்கிழமை (நவம்பர் 13) ஈராண்டுகள் ஒன்பது மாதச் சிறைத்தண்டனையும் இரண்டு பிரம்படிகளும் விதிக்கப்பட்டன. பங்ளாதேஷைச் சேர்ந்த அவரது தண்டனைக்காலம் 2024 பிப்ரவரி 14ஆம் தேதியிலிருந்து கணக்கிடப்படும்.

பிலால் சம்பவ நாளன்று மாலை 5 மணியளவில் ஆற்றங்கரையில் ஓய்வெடுப்பதற்காகத் தன் வீட்டிலிருந்து காலாங் விளையாட்டரங்கை நோக்கி சைக்கிளில் சென்றதாக நீதிமன்ற ஆவணங்களை மேற்கோள்காட்டி ‘மதர்ஷிப்’ தகவல் வெளியிட்டுள்ளது.

மெர்டேகா பாலத்திற்குக்கீழ் உள்ள நிலத்தடிப் பாதையில் சென்றபோது சைக்கிளுக்கான பூட்டு ஒன்று கீழே கிடந்ததைக் கண்ட பிலால் அதைக் கையில் எடுத்தார். திடீரென அங்கு வந்த பிரமானிக் ஷமீம் எனும் ஆடவர் பிலால் தனது மின்ஸ்கூட்டரையும் சைக்கிள் பூட்டையும் திருடியதாகச் சாடினார்.

பிலாலிடமிருந்து பூட்டைப் பறித்துக்கொண்ட அவர் $1,000 இழப்பீடு கேட்டார். திருடியதாகக் கூறப்பட்டதை நிராகரித்த பிலால் பணம் தர மறுத்ததால் சைக்கிள் பூட்டால் ஆடவர் அவரைத் தாக்கினார். சிறிது நேரத்தில் அங்கு வந்த மேலும் நால்வர் பிலாலை அடித்து, உதைத்தனர்.

அவரிடமிருந்த பற்று அட்டை, கைப்பேசி, $50 ரொக்கத்தை அவர்கள் பறித்துக்கொண்டனர்.

பின்னர் தன் சகோதரரை அழைத்துப் பிணைத்தொகையாக $1,000 கொண்டுவரும்படி கூறுமாறு பிலாலை வலியுறுத்தியதுடன் தொடர்ந்து அவரைத் தாக்கினர்.

இரவு 7.30 மணியளவில் சம்பவ இடத்தை அடைந்த பிலாலின் சகோதரர் பிணைத்தொகையைத் தர மறுத்ததுடன் காவல்துறையை அழைக்கப்போவதாக மிரட்டினார்.

சகோதரர் இருவரும் அங்கிருந்து தப்பியோடிக் காவல்துறையின் உதவியை நாடினர்.

பிலாலின் தலையிலும் உடலெங்கும் காயங்களும் வீக்கமும் ஏற்பட்டதாக மருத்துவ அறிக்கை குறிப்பிடுகிறது. காவல்துறையினர் பின்னர் அவரது கைப்பேசியை மட்டும் மீட்டுத் தந்ததாகத் தெரிகிறது.

கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மற்ற நால்வர் மீதான வழக்கு விசாரணை பின்னொரு தேதியில் நடைபெறும்.

குறிப்புச் சொற்கள்