சிங்கப்பூரில் சாலை விபத்துகளும் மரணங்களும் கூடியிருப்பது அண்மைய புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது.
இந்த ஆண்டின் (2025) ஜனவரி மாதத்திலிருந்து செப்டம்பர் வரை, காயங்களையும் மரணங்களையும் விளைவித்த விபத்துகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டின் அதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 7.4 விழுக்காடு அதிகரித்துள்ளது. சென்ற ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 5,368ஆக இருந்த எண்ணிக்கை இவ்வாண்டில் 5,765க்கு ஏற்றங்கண்டது.
விபத்துகளில் தொடர்ந்து, மோட்டார்சைக்கிளோட்டிகளும் நடந்துசெல்வோரும் அதிகம் பாதிக்கப்பட்டனர்
மோட்டார்சைக்கிள் ஓட்டுவோர் சம்பந்தப்பட்ட விபத்துகளின் எண்ணிக்கை 7.8 விழுக்காடு அதிகரித்தது. அது கடந்த ஆண்டில் 2,960ஆக இருந்தது. இந்த ஆண்டில் எண்ணிக்கை 3,191க்குக் கூடியது. வயதான பாதசாரிகள் சம்பந்தப்பட்ட விபத்துகளின் எண்ணிக்கை 17.8 விழுக்காடு ஏற்றங்கண்டது. போன ஆண்டு 152ஆக இருந்த அது, இவ்வாண்டில் 179க்கு அதிகரித்தது.
உள்துறை, வெளியுறவு மூத்த துணையமைச்சர் சிம் ஆன் அந்தப் புள்ளிவிவரங்களை வெளியிட்டார். மரினா பே சேண்ட்சில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 24) இரவு நடைபெற்ற சிங்கப்பூர்ச் சாலைப் பாதுகாப்பு மன்றத்தின் நிதித் திரட்டு விருந்து நிகழ்ச்சியில் அவர் பேசினார்.
“மோட்டார்சைக்கிள் ஓட்டுவோர், முறையான பாதுகாப்புக் கவசங்கள் இல்லாமல் சாலைகளில் செல்வதை நாம் அன்றாடம் பார்க்கிறோம். போக்குவரத்து மிகுந்த சாலைகளில் முதியவர்கள் ஆபத்தான குறுக்கு வழிகளில் கடந்துபோவதைக் காண்கிறோம். அதனால் அந்தப் புள்ளிவிவரங்கள் கவலை தருகின்றன,” என்றார் திருவாட்டி சிம்.
நமது முயற்சிகளைத் தொடரவேண்டியதன் அவசியத்தைப் புள்ளிவிவரங்கள் வலியுறுத்துவதாக அவர் சொன்னார். அத்துடன் சாலைப் பாதுகாப்பு மன்றம் அதன் பங்காளித்துவ அமைப்புகளுடன் பணிபுரிவது தொடர்ந்து முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் அவை காட்டுவதாகத் திருவாட்டி சிம் கூறினார். மன்றம் விருந்து நிகழ்ச்சியின் மூலம் $612,000 நிதி திரட்டியது.
சமூகத்தின் பேராதரவை அது பிரதிபலிப்பதாகவும் மன்றத்தின் நோக்கம் முக்கியமானது என்பதற்கு அது சான்றாகவும் விளங்குவதாய்த் திருவாட்டி சிம் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
திரட்டப்பட்ட நிதி, சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஆதரவளிக்கப் பயன்படுத்தப்படும்.

