ஜோகூர் பாரு, சிங்கப்பூர்: மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு அண்மையில் அதிகரித்திருப்பது சிங்கப்பூரில் வேலை செய்யும் மலேசியர்களிடையே சில கேள்விகளை எழுப்பியுள்ளது.
பொதுவாக மலேசியர்கள், கூடுதல் சம்பளத்திற்காகச் சிங்கப்பூருக்கு வருகின்றனர். ரிங்கிட்டின் மதிப்புக் கூடியதால் அவர்கள் மலேசியாவுக்கு எடுத்துச் செல்லும் பணம் குறையும். அதனால் மீண்டும் மலேசியாவுக்கே திரும்பிச் செல்லலாமா என்ற கேள்வியும் அவர்களிடையே எழுந்துள்ளது.
ரிங்கிட்டின் மதிப்பு உயர்வதால் அதிகமானோர் சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்குச் சென்றுவிடுவார்கள் என்று இப்போதே சொல்வது சிரமம் என ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி ஊடகம் பேசிய ஊழியர்களில் பெரும்பாலோரும் கவனிப்பாளர்கள் சிலரும் கூறினர்.
ரிங்கிட்டின் மதிப்பு அதிகரித்துள்ளபோதும் மலேசியாவில் பொருள்களின் விலையும் சேவைக் கட்டணமும் கூடியுள்ளதைச் சிலர் சுட்டினர். அதனால் மலேசியர்கள் தொடர்ந்து சிங்கப்பூரிலேயே வேலை செய்வார்கள் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
2022ஆம் ஆண்டு நிலவரப்படி, 1.13 மில்லியன் மலேசியர்கள் சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்துள்ளனர். அந்தப் புள்ளிவிவரங்கள் இடம்பெற்றிருந்த அறிக்கையை மலேசியாவின் சமுதாயப் பாதுகாப்பு அமைப்பான பெர்க்கெசோ 2023ல் வெளியிட்டது. மலேசியாவுக்கு வெளியே குடியேறிய 1.86 மில்லியன் குடிமக்களில் அதிகமானோர் சிங்கப்பூரில் இருக்கின்றனர்.
மலேசிய ரிங்கிட்டின் மதிப்புக் குறித்து இணையவாசிகள் பலர் கருத்துகளைப் பதிவிட்டிருந்தனர்.
தற்போதைய பரிவர்த்தனையின்படி ஒரு வெள்ளிக்கு 3.20 ரிங்கிட். 2024ஆம் ஆண்டு செப்டம்பரில் அது 3.40 ரிங்கிட்டாக இருந்தது.
2000ஆம் ஆண்டுக்கும் 2010க்கும் இடையில் ஒரு வெள்ளிக்கு 2.25, 2.44 என்ற நிலையில் ரிங்கிட் பரிவர்த்தனை செய்யப்பட்டதாகவும் 2020க்குப் பிறகுதான் அது 3.0ஐத் தொட்டதாகவும் சிலர் குறிப்பிட்டனர். சிங்கப்பூரில் வேலை செய்யும் திரு ஷான் மூ, வெள்ளிக்கு நிகரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்புக் கூடுவது நல்ல அறிகுறி என்று குறிப்பிட்டார். இருப்பினும் மலேசியாவில் வாழ்க்கைச் செலவு குறைந்தால்தான் அங்கு மீண்டும் திரும்புவது பற்றிப் பரிசீலிக்கமுடியும் என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
“ஜோகூர் பாருவில் கடைகளில் உணவு உட்கொள்வதற்கு அதிகச் செலவாகும். உணவகத்தில் கறி நூடல்ஸ் உணவு ஒன்றின் விலை 10 முதல் 25 ரிங்கிட் வரை இருக்கும்,” என்றார் அவர்.
ஜோகூரில் பணவீக்கம் ஆண்டு அடிப்படையில் கடந்த மாதத்தில் (அக்டோபர் 2025) 2 விழுக்காடு என்று மலேசியப் புள்ளிவிவரத் துறை தெரிவித்தது. மலேசிய மாநிலங்களில் அதுவே ஆக அதிகம். இரண்டாவது இடத்தில் சிலாங்கூர். அங்குப் பணவீக்கம் 1.9 விழுக்காடு. எட்டாவது இடத்தில் வந்த கோலாலம்பூரில் பணவீக்கம் 1.3 விழுக்காடாக இருந்தது.
ஆண்டிறுதிக்குள் ஒரு வெள்ளிக்கு நிகரான ரிங்கிட்டின் மதிப்பு 3.20க்கும் 3.40க்கும் இடைப்பட்டிருக்கும் என்று வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.

