தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆறு சுற்றுப்பயண முகவைகளின் உரிமம் ரத்து

1 mins read
fbd1003f-cc26-4af8-bc2b-dedaaa9fb659
ஜெமினாய் டிராவல் என் டுவர்ஸ், இன்டர்சிஸ், எஸ்ஜிவான்கா, விஎஸ் டிராவல், விஸ்ஃபேர் டிராவல், ஸேன் டிராவல்ஸ் ஆகிய சுற்றுப்பயண முகவைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தணிக்கை செய்யப்பட்ட கணக்கறிக்கைகளைச் சமர்ப்பிக்காததற்கும் வருடாந்தர நிதி அறிக்கையைச் சமர்ப்பிக்காததற்கும் ஆறு சுற்றுப்பயண முகவைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திங்கட்கிழமையன்று (ஜூன் 23) சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் தெரிவித்தது.

சுற்றுப்பயண முகவைகள் சட்டப் பிரிவு 1975ன்கீழ் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அது கூறியது.

இச்சட்டத்தின்கீழ், சுற்றுப்பயண முகவைகள் அவற்றின் தணிக்கை செய்யப்பட்ட கணக்கறிக்கையையும் நிதி அறிக்கையையும் நிதியாண்டு நிறைவடைந்து, ஆறு மாதங்களுக்குள் சமர்ப்பித்துவிட வேண்டும்.

உரிமம் பறிக்கப்பட்ட நிறுவனங்களில் ஒன்று குறைந்தபட்ச நிதி வைப்புத்தொகையை வைத்திருக்கத் தவறிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

சுற்றுப்பயணத்துறை முகவைகள் விதிமுறைகள் 2017ன்கீழ் சுற்றுப்பயணத்துறை முகவைகளின் வங்கிக் கணக்கில் குறைந்தது $100,000 இருக்க வேண்டும். இத்தொகை அவர்களது வங்கிக் கணக்கில் எந்நேரமும் இருக்க வேண்டும்.

ஜெமினாய் டிராவல் என் டுவர்ஸ், இன்டர்சிஸ், எஸ்ஜிவான்கா, விஎஸ் டிராவல், விஸ்ஃபேர் டிராவல், ஸேன் டிராவல்ஸ் ஆகிய சுற்றுப்பயண முகவைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன.

இந்தச் சுற்றுப்பயண முகவைகள் சுற்றுப்பயணங்களுடன் தொடர்புடைய நடவடிக்கைகளில் இனி ஈடுபட முடியாது.

உரிமம் ரத்து செய்யப்பட்ட இந்தச் சுற்றுப்பயண முகவைகள் வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட பணத்தை அவர்களிடம் திரும்ப தந்துவிட வேண்டும் அல்லது அவர்களுக்கான சுற்றுப்பயண ஏற்பாடுகளைப் பூர்த்தி செய்ய மற்ற சுற்றுப்பயண முகவைகளிடம் அவர்கள் தொடர்பான பரிவர்த்தனைகளை ஒப்படைக்க வேண்டும்.

“சிங்கப்பூரின் சுற்றுப்பயணத்துறைக்குக் களங்கம் ஏற்படாதிருக்க, விதிமுறைகளை மீறும் சுற்றுப்பயணத்துறை முகவைகளுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்,” என்று சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் கூறியது.

குறிப்புச் சொற்கள்