ஈசூன் வட்டாரத்தில் தனிநபர் நடமாட்டச் சாதனங்களை மாற்றியமைத்ததாக நம்பப்படும் சில்லறை வர்த்தகக் கடையில் நிலப் போக்குவரத்து ஆணையம் சோதனை நடத்தியிருக்கிறது.
கடந்த புதன்கிழமை (அக்டோபர் 29) அக்கடையில் சோதனை நடத்தப்பட்டது. தங்களின் நடமாட்ட உதவி அமலாக்க அதிகாரிகள் (active mobility enforecement officers) சம்பந்தப்பட்ட சில்லறை வர்த்தகக் கடையில் நடவடிக்கை எடுத்ததாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.
அந்த சில்லறை வர்த்தகர், தனிநபர் நடமாட்டச் சாதனங்களில் கூடுதல் மின்கலன்களைப் பொருத்தியதாக நம்பப்படுகிறது. விதிமுறைகளைப் பூர்த்திசெய்யாத மூன்று தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
“சட்டவிரோதமாக சாதனங்களை மாற்றியமைக்கும் சேவைகளை வழங்குவதாக சந்தேகிக்கப்படும் வர்த்தகர்கள், தனிநபர்கள் மீது நாங்கள் தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுப்போம்,” என்று நிலப் போக்குவரத்து ஆணையம் வியாழக்கிழமை (அக்டோபர் 30) ஃபேஸ்புக்கில் பதிவிட்டது.
“இதுபோன்ற மாற்றங்கள், சாதனங்களைப் பயன்படுத்துவோர், பொதுமக்கள் இரு தரப்பினருக்கும் அபாயம் விளைவிக்கின்றன. பாதுகாப்பாக இருங்கள், சட்டத்தைப் பின்பற்றி நடந்துகொள்ளுங்கள்,” என்றும் ஆணையம் அறுவுரை வழங்கியது.
நம்பகமான சில்லறை வர்த்தகர்களிடமிருந்து, விதிமுறைகளைப் பூர்த்திசெய்யும் தனிநபர் நடமாட்டச் சாதனங்களை வாங்குமாறு பயனர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட சாதனங்களை வாங்குவோர், அவற்றில் குறைபாடுகளோ மாற்றங்களோ இருக்கின்றனவா என்பதைத் தெரிந்துகொள்ளுமாறும் பயனர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

