தோக்கியோ: ஐக்கிய நாடுகள் மன்றத்தில் பாலஸ்தீனத்தை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிக்க ஜப்பான் மறுக்கக்கூடும் என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவுடனான உறவைக் காக்கவும் இஸ்ரேலின் அணுகுமுறைக் கடினமாவதைத் தவிர்க்கவும் அந்த முடிவை ஜப்பான் எடுத்திருப்பதாக அசாஹி செய்தித்தாள் புதன்கிழமை (செப்டம்பர் 17) தெரிவித்துள்ளது. அடையாளம் குறிப்பிடப்படாத அரசாங்கத் தரப்புத் தகவல்களை அது அதற்கு மேற்கோள் காட்டியுள்ளது.
பிரிட்டன், பிரான்ஸ், கனடா, ஆஸ்திரேலியா ஆகியன உள்ளிட்ட பல அரசாங்கங்கள் ஐநா பொதுச் சபையில் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்க உள்ள நிலையில் ஜப்பான் அதற்கு மாறான முடிவை எடுத்துள்ளதாக அசாஹி குறிப்பிட்டுள்ளது.
வரும் திங்கட்கிழமை (செப்டம்பர் 22) ஐநா பொதுச் சபை கூட்டத்தில் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க வேண்டாம் என பல்வேறு அரசதந்திர முறைகள் வாயிலாக ஜப்பானை அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.
அதேநேரம், பாலஸ்தீனத்தை அங்கீகரிக்குமாறு ஜப்பானிய வெளியுறவு அமைச்சரிடம் பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் ஜீன்-நோயல் பாரட் வலியுறுத்தி உள்ளதாக கியோடோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து பாலஸ்தீன நாடு என்னும் அந்தஸ்தை அங்கீகரிப்பதா வேண்டாமா, அங்கீகாரம் வழங்க போதுமான நேரம் எது என்பன போன்றவை குறித்து விரிவான ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் தகேஷி ஐயாவா செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 16) செய்தி நிறுவனம் ஒன்றிடம் கூறினார்.

