சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் (முயிஸ்), அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான சமய ஆசிரியர் அங்கீகார வாரியத்தை நியமித்துள்ளது.
2005ல் அமைக்கப்பட்ட வாரியம், சிங்கப்பூரில் உள்ள இஸ்லாமிய சமய ஆசிரியர்களை நிர்வகிக்கிறது.
சிங்கப்பூரில் உள்ள முஸ்லிம் சமூகத்திற்குத் தரமான சமய போதனைகளையும் வழிகாட்டுதலையும் வழங்குவதற்கு ஏற்ற தகுதியான சமய போதகர்களை அடையாளம் காணும் சமய ஆசிரியர் அங்கீகாரத் திட்டத்தையும் வாரியம் கவனித்துக்கொள்கிறது.
ஃபுராமா ஹோட்டலில் புதன்கிழமை (நவம்பர் 19) நடைபெற்ற நியமன நிகழ்ச்சியில் ஐந்து புதிய உறுப்பினர்கள் வாரியத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். அவர்களுடன் சேர்த்து 12 பேர் வாரியத்தில் அங்கம் வகிக்கின்றனர். ஏழு பேர் மீண்டும் வாரியத்தில் மறுநியமனம் செய்யப்பட்டனர்.
புதிய உறுப்பினர்களில் ஒருவரான உஸ்தாட் முகமது நாசிம், “சிங்கப்பூர் முஸ்லிம்களிடையே மனநலம் தொடர்பான ஆலோசனைகளை வழங்குவதற்கான வழிமுறைகளை வலுப்படுத்த விரும்புகிறேன்,” என்றார்.
சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் சமூகத்தினரிடையே உள்ளூர் சமயப் போதகர்களுக்கு முறையான பயிற்சிகளையும் காலத்திற்கு ஏற்ற திறன்களையும் கற்பிக்க விரும்புவதாகவும் உஸ்தாட் நாசிம் கூறினார்.
முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சரும் உள்துறை மூத்த துணையமைச்சருமான இணைப் பேராசிரியர் முகம்மது ஃபைஷால் இப்ராஹிம் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வாரியத்தின் முயற்சிகளைப் பாராட்டினார்.
“சமய ஆசிரியர் அங்கீகார வாரியம் மூலம் அங்கீகாரத் திட்டத்தில் இணைந்த சமய ஆசிரியர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. தொடக்கத்தில் கையளவு இருந்த சமய ஆசிரியர்களின் எண்ணிக்கை தற்போது கிட்டத்தட்ட 5,200ஆக அதிகரித்துள்ளது,” என்றார் இணைப் பேராசிரியர் ஃபைஷால்.
தொடர்புடைய செய்திகள்
சமய ஆசிரியர் அங்கீகார வாரியத்தின் புதிய ஆலோசனைக் குழு ஒன்றும் நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டது. வாரியத்தின் முன்னாள் உறுப்பினர்கள் ஆலோசனைக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர். அவர்கள் அனைவரும் வாரியத்தில் 15 ஆண்டுகளுக்குமேல் சேவையாற்றியவர்கள்.
இதற்கிடையே, 15 ஆண்டுகளுக்குமேல் வாரியத்தில் சேவையாற்றிய நால்வருக்கு நிகழ்ச்சியில் முதன்முறையாக நீண்டகாலச் சேவை விருதுகள் வழங்கப்பட்டன.


