ஆசிய அனல்மின் நிலையங்கள் மூன்றில் ஒன்றை மூடுவதால் கரிம வெளியேற்றத்தைக் குறைக்கலாம்

2 mins read
ஆண்டுக்கு ஒரு பில்லியன் டன் கரியமில வாயு வெளியேற்றம் குறையும்
b3fcfda5-bd22-4ff5-abd0-383f77a2a33b
ஆசியாவிலும் உலகின் இதர பகுதிகளிலும் கரிம வெளியேற்றத்தில் ஆகப் பெரிய பங்கு வகிக்கிறது நிலக்கரி. ஆசிய வட்டாரத்தின் கரிம வெளியேற்றத்தில் மூன்றில் ஒரு பங்கு அனல்மின் நிலையங்களிலிருந்து வெளியேறுகிறது. - படம்: ஏஎஃப்பி

பத்துக்கும் மேற்பட்ட ஆசிய நாடுகளில் இயங்கும் அனல்மின் நிலையங்களில் மூன்றில் ஒரு பங்கைப் படிப்படியாக மூடுவதன் மூலம் கரிம வெளியேற்றத்தை வெகுவாகக் குறைக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் தலைமையிலான திட்டம் இதனைக் கண்டறிந்தது.

புதுமையான கரிம ஊக்கப் புள்ளிகள் வழங்கும் திட்டத்தின் மூலம் ஆசிய வட்டாரத்தில் நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் அனல்மின் நிலையங்களில் மூன்றில் ஒரு பங்கை மூடினால் ஆண்டுக்கு ஒரு பில்லியன் டன் கரியமில வாயு வெளியேற்றம் குறையும் என்று கூறப்படுகிறது.

இது, 2024ல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ஒட்டுமொத்தக் கரிம வெளியேற்றத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கிற்குச் சமம்.

பருவநிலை நடவடிக்கைகளுக்கான சிங்கப்பூர்த் தூதர் ரவி மேனன் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.

பிரேசிலில் நடைபெறும் ஐக்கிய நாட்டு நிறுவனப் பருவநிலை மாற்றக் கருத்தரங்கின் (COP30) முதல் நாளான திங்கட்கிழமை (நவம்பர் 10), சிங்கப்பூர்க் காட்சிக்கூடத்தின் (Singapore Pavilion) திறப்பு விழாவில் அவர் உரையாற்றினார்.

முன்னோட்ட முயற்சியாக, வட்டாரத்தின் பருவநிலைச் சிக்கல்களுக்குத் தீர்வுகாணும் நோக்கில் சிங்கப்பூர் புதியவகைக் கரிமப் புள்ளிகளை வழங்குகிறது.

பருவநிலை நடவடிக்கைகளில் மேம்பாடு காண்பதற்குச் சிங்கப்பூர் மேற்கொள்ளும் முயற்சிகளில் இந்தக் கரிம ஊக்கப் புள்ளிகள் திட்டமும் அடங்கும் என்றார் திரு மேனன்.

கரிமக் குறைப்புக்கு உதவும் வகையில் கரிமச் சந்தைகள் நிதியுதவி செய்யும் என்று கூறிய அவர், சிங்கப்பூர் இதன் தொடர்பில் கலவையான நிதியுதவி முறைகளைப் பரிசீலித்து வருகிறது என்றார். அரசாங்க, தனியார், நன்கொடை மூலதனங்களை இணைத்து பருவநிலைத் திட்டங்களுக்கான நிதியை அதிகரிப்பது நோக்கம்.

ஏறத்தாழ 200 நாடுகளின் பிரதிநிதிகள் ‘காப்30’ மாநாட்டில் பங்கேற்கின்றனர். உலகளாவிய நிலையில் கரிம வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான தீர்வுகளை எட்டுவதும் பருவநிலை மாற்றத்தின் தாக்கங்களைக் குறைக்கும் வழிமுறைகளை உருவாக்குவதும் பருவநிலை நடவடிக்கைகளுக்கு நிதியுதவி செய்வதற்கான முயற்சிகளை அதிகரிப்பதும் இலக்குகள்.

ஆசியாவில் கிட்டத்தட்ட 2,000 அனல்மின் நிலையங்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை சீனாவில் அமைந்துள்ளன.

குறிப்புச் சொற்கள்