உலகின் பல்வேறு பகுதிகளில் சந்திர கிரகணத்தின்போது தென்பட்ட சிவந்த நிலவு, ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 7) சிங்கப்பூரில் இருந்தவர்களின் கண்களுக்குத் தெளிவாகத் தெரியாமல் மேகங்களிடையே மறைந்திருந்தது.
ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளில் சிவந்த நிலவு நன்கு தெரிந்தது. ஃபேஸ்புக்கில் ‘கிளவுட்ஸ்பாட்டிங் & ஸ்கைஸ்பாட்டிங் சிங்கப்பூர்’ என்ற ஆர்வலர் குழுவின் உறுப்பினர்கள் பலர், தங்கள் கேமராக்களில் எடுத்த படங்களைப் பதிவிட்டனர்.
சிவந்த நிலவை மேகங்கள் மறைத்தது குறித்து பலர் தங்கள் வருத்தத்தையும் ஏக்கத்தையும் வெளிப்படுத்தினர்.
சிலர் தங்கள் இருப்பிடங்களுக்கு அருகிலிருந்து அம்புலியை ஓரளவு பார்த்தனர். வேறு சிலர் மரினா அணைக்கட்டு உள்ளிட்ட இடங்களின் கூரைகளிலிருந்து படம் பிடித்தனர்.
சிங்கப்பூர் வானியல் சங்கத்தின் உறுப்பினர்கள் மரினா பே பகுதியில் உள்ள பேஷன் வேவ் என்ற இடத்தில் இருந்ததாகவும் நிலாவை மேகங்கள் மறைத்ததாகவும் செப்டம்பர் 8 அதிகாலையில் வெளிவந்த ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தனர்.
முழுச் சந்திர கிரகணத்தால் நிலவு சிவந்த வண்ணத்தில் தெரிந்தது. செப்டம்பர் மாத முழுநிலவு, ‘கார்ன் மூன்’ (Corn Moon) என்று ஆர்வலார்களால் அழைக்கப்படுகிறது.
கிரகணத்தின் போது நிலவு சிவப்பு நிறத்தைப் பெறும் நிகழ்வு கடைசியாக 2022ஆம் ஆண்டு நவம்பர் 8ல் சிங்கப்பூரில் காணப்பட்டது.
முழுச் சந்திர கிரகணங்கள் மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை தெரியும் என்று சிங்கப்பூர் அறிவியல் மைய ஆய்வகம் தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
ஏஎஃப்பி செய்தியின்படி, சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் வரும்போது, பூமி அதன் துணைக்கோள் மீது ஏற்படுத்தும் நிழல் அதை அடர் சிவப்பு நிறமாக மாற்றுகிறது.

