மனிதக் கண்களுக்குப் புலப்படாத பிளவுகளைக் கண்டறியும் ரயில் ரோவர் வாகனத்தை எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் தண்டவாளப் பராமரிப்பில் பயன்படுத்தி வருகிறது.
கடந்த ஆண்டுகளில் அந்த வாகனம் படிப்படியாக மேம்படுத்தப்பட்டுள்ளது. முப்பரிமாண படக்கருவிகளும் லேசர் உணர்கருவிகளும் அவற்றில் 2022ஆம் ஆண்டில் பொருத்தப்பட்டன.
ஒரு இரவில் மனிதர்களால் 200 மீட்டர் தூரம்தான் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளமுடியும். அதேநேரத்தில் டௌன்டவுன் எம்ஆர்டி வழித்தடத்தில் 4.5 கிலோமீட்டர் தூரத்தை கண்காணிக்க ரோவர் வாகனம் பயன்படுகிறது. பழுதுகள் முன்னரே ரயில் ரோவரால் அடையாளம் காணப்படுவதால் பராமரிப்பு உற்பத்தித்திறன் 30 விழுக்காடு அதிகரித்துள்ளது.
வரும் 2027ஆம் ஆண்டுக்குள் வடக்கு-கிழக்கு (NEL) வழித்தடங்களிலும் ரயில் ரோவரை பயன்படுத்தத் திட்டமிடப்படுகிறது. வடக்கு - கிழக்குத் தடம் 22 ஆண்டுகளாக இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.
தண்டவாளத்தில் ரோவர் செல்லும்போது நிகழ்நேரத்தில் பொறியாளர்களுக்குத் தரவுகள் வழங்கப்படுகின்றன. மேலும், ரயில்கள் செல்லும் சுரங்கவழியும் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. சுவரில் நீர் ஒழுகுதல், விரிசல் அல்லது கட்டுமான முரண்கள் போன்றவையும் கண்டறியப்படுகின்றன. கடந்த 2013ஆம் ஆண்டில் சேவையில் இணைந்த ரயில் ரோவர்களில் உள்ள லேசர் உணர்கருவி, ரயில்களுக்கு மின்சக்தியை வழங்கும் மூன்றாம் தண்டவாளத்தையும் கண்காணிக்கிறது.
இவ்வாண்டு மார்ச் மாதம் முதல் சேவையாற்றும் மேம்படுத்தப்பட்டுள்ள ரயில் ரோவர் வாகனத்தின் செயல்முறைகள் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 10) ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர்களுக்கு ஸ்டீவன்ஸ் எம்ஆர்டி நிலையத்தில் உள்ள சுரங்கவழியில் காட்சிப்படுத்தப்பட்டது.
ரயில் தண்டவாளப் பராமரிப்புக்கு எஸ்எம்ஆர்டி நிறுவனம் லேசர் உணர்கருவி பொருத்தப்பட்ட தள்ளுவண்டிகளைப் பயன்படுத்துகிறது.ஓர் இரவில் 10 கி.மீ. தொலைவிற்குத் தடம் கண்காணிக்கப்படுகிறது. அதன் மின்னிலக்கச் செயல்முறை ஆண்டுதோறும் 30,000 மணிநேர மனித வேலையை மிச்சப்படுத்துகிறது.