தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வானொலிப் புகழ் எஸ்.பீட்டர் காலமானார்

3 mins read
ee35de90-5857-4fdf-a2cd-d5a1e709af48
மீடியாகார்ப்பின் ‘பிரதான விழா’ வாழ்நாள் சாதனையாளர் கிண்ணத்தைக் கையில் திரு எஸ்.பீட்டர் வைத்திருக்கிறார். - படம்: மீடியாகார்ப்

மூத்த தமிழ் வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் எஸ்.பீட்டர் காலமானார். அவருக்கு வயது 77. 

57 ஆண்டுகளாக வானொலித் துறையில் பணியாற்றிய திரு பீட்டர், வானொலிப் படைப்பாளராகவும் பின்னர் செய்தி வாசிப்பவராகவும் செயல்பட்டார். 

தொடக்கத்தில் ஆசிரியராகப் பணியாற்றிய திரு பீட்டர், 1968ஆம் ஆண்டில் தமது 20வது வயதில் வானொலியின் தமிழ்ப் பிரிவில் அறிவிப்பாளராகச் சேர்ந்தார். 

பல்வேறு வானொலி நிகழ்ச்சிகளின் தயாரிப்பாளராகவும் படைப்பாளராகவும் இருந்த திரு பீட்டர், 1998ல் வானொலியின் செய்திப் பிரிவுக்கு மாறினார்.

திரு பீட்டர் காலமான செய்தியை வெள்ளிக்கிழமை (ஜூன் 27) பிற்பகல் வெளியிட்ட மீடியாகார்ப் செய்தி இணையத்தளம், தமிழ்ச் செய்தி வாசிப்பாளர்களுக்குப் பயிற்சி அளித்து அவர்களை உருவாக்குவதில் அவர் பெரும் பங்காற்றியதாகக் குறிப்பிட்டது.

2011ல் பதவி ஓய்வு பெற்ற திரு பீட்டர், பகுதிநேர செய்தித் தொகுப்பாளராகப் பணியாற்றி வந்தார்.

திரு பீட்டரின் ஊடகப் பங்களிப்பைச் சிறப்பிக்கும் விதமாக அவருக்கு 2025ஆம் ஆண்டு மீடியாகார்ப்பின் ‘பிரதான விழா’வில் வாழ்நாள் சாதனையாளர் விருதளித்து சிறப்பிக்கப்பட்டது.

வியக்கவைத்த திறமைசாலி: மூத்த ஊடகவியலாளர்கள் பாராட்டு

‘பல்திறன் வித்தகர்’, ‘பிறரிடம் அன்பு காட்டுபவர்’ என திரு பீட்டரைப் பற்றிய கருத்துகளுடன் தங்கள் நினைவுகளை ஊடகத்துறையில் அவருடன் பணியாற்றியவர்கள் தமிழ் முரசிடம் பகிர்ந்தனர்.

வானொலி, தொலைக்காட்சி நேயர்களால் விரும்பப்பட்ட மனிதர் என்று முன்னாள் தொலைக்காட்சி செய்திப்பிரிவு, நடப்பு விவகாரத் தலைவர் எம்.கார்மேகம் தெரிவித்தார். 

“கடின உழைப்பும் பல்வேறு திறன்களும் கொண்ட திரு பீட்டர், தொலைக்காட்சியில் மிக அழகாகத் தோற்றமளிப்பார்,” என்று திரு கார்மேகம் கூறினார்.

அன்றைய உள்ளூர்த் தொலைக்காட்சியின் தமிழ் ஒளிவழியில் திரு பீட்டரும் தாமும் இணைந்து தமிழ்ச் செய்தியை வாசித்ததையும் திரு செ.ப.பன்னீர்செல்வம் நினைவுகூர்ந்தார். 

“எம்.கே.நாராயணன், பி.கிருஷ்ணன் இருவரும் எழுதிய நாடகங்களில் நடிகராக இடம்பெற்றுள்ளார். அமரர் பிச்சையம்மாள் பழனியாண்டியின் ‘ராமாயணம்’ வானொலி நாடகத்திலும் அவர் இடம்பெற்றார்,” என்றும் திரு பன்னீர்செல்வம் கூறினார்.

1984 முதல் 1996ஆம் ஆண்டு வரை ஒலி 96.8 தமிழ் வானொலிப் பிரிவில் திரு பீட்டருடன் இணைந்து பணியாற்றிய தமிழ் முரசின் இணை ஆசிரியர் வீ.பழனிச்சாமி, திரு பீட்டருடன் சேர்ந்து காற்பந்துப் போட்டிகளின் நேரடி வர்ணனை செய்ததை நினைவுகூர்ந்தார்.

“ஒலி 96.8 நடத்திய பல்வேறு கலைநிகழ்ச்சிகளுக்கு திரு பீட்டர்தான் தயாரிப்பாளர். தமிழில், பிழையின்றி சிறப்பாக அறிவிப்பு செய்யும் நுணுக்கங்களை எனக்குக் கற்றுக்கொடுத்தவர்களில் திரு பீட்டரும் ஒருவர்,” என்றும் திரு பழனி கூறினார். 

அருமையான மனிதர், அன்பாகப் பழகக்கூடியவர், எப்போதும் புன்சிரிப்புடன் திகழக்கூடியவர் என்று முன்னாள் மூத்த செய்தி ஊடகவியலாளர் நா.ஆண்டியப்பன் தெரிவித்தார்.

திரு பீட்டருடன் பணியாற்றிய காலம் மறக்க முடியாதது என்று 1990களில் பணியாற்றிய முன்னாள் மூத்த வானொலி அறிவிப்பாளர் பிச்சினிக்காடு இளங்கோ தெரிவித்தார்.

திரு பீட்டர்மீது எல்லாருக்குமே ஒரு தனி மரியாதை உண்டு என்று அவருடன் பணியாற்றிய ஊடகவியலாளர் சபா. முத்து நடராஜன் தெரிவித்தார்.

“திரு பீட்டர் பார்ப்பதற்குக் கண்டிப்பானவர். ஆனால் பழகுவதற்குக் கனிவானவர்,” என்று அவர் கூறினார்.

திரு பீட்டர், மனைவியையும் மூன்று பிள்ளைகளையும் விட்டுப் பிரிகிறார். அவரது நல்லுடல், செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.00 மணி சுவா சூ காங் கிறிஸ்துவ இடுகாட்டை நோக்கிப் புறப்படும்.

செய்தி: கி.ஜனார்த்தனன்
குறிப்புச் சொற்கள்