இனத்தையும் சமயத்தையும் அரசியலுடன் கலக்கக் கூடாது என்பதைப் பாட்டாளிக் கட்சி ஏற்றுக்கொள்கிறது என்றும் 2025 பொதுத் தேர்தல் பிரசாரத்தின்போது வெளிநாட்டுத் தலையீடு குறித்த தனது கருத்துகளை அது தெளிவாகத் தெரிவித்திருந்தது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் பிரித்தம் சிங் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 14) நாடாளுமன்றத்தில் கூறினார்.
தேசியப் பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் கா.சண்முகம், சிங்கப்பூர் சமயப் போதகர் நூர் டெரோசின் கருத்துகள் குறித்த பாட்டாளிக் கட்சியின் ஏப்ரல் 26ஆம் தேதி அறிக்கை இன்னும் தெளிவாக இருந்திருக்கலாம் என்ற விமர்சனத்தை திரு சிங் ஏற்றுக்கொண்டார், ஆனால், பொதுத் தேர்தலின்போது இந்த விவகாரத்துக்குப் பதிலளிக்க பாட்டாளிக் கட்சி அதிக காலம் எடுத்துக்கொண்டது என்ற விமர்சனத்தை அவர் ஏற்கவில்லை.
“வெளிநாட்டுத் தலையீடு குறித்து எங்கள் கருத்துகளை நாங்கள் மிகவும் தெளிவாகத் தெரிவித்திருந்தோம்,” என்று திரு சிங் கூறினார்.
“நூர் டெரோஸ் குறித்த அறிக்கை இன்னும் தெளிவாக இருந்திருக்கலாம் என்று அமைச்சர் கூறுவதைப் புரிந்துகொள்கிறேன். அதை நான் ஏற்றுக்கொள்கிறேன், சில விஷயங்களை நாங்கள் மிகத் தெளிவாகக் கூற முடியும் என்று நினைக்கிறேன்,” என்றார் திரு சிங்.
திரு சண்முகத்தின் அமைச்சர்நிலை அறிக்கைக்குப் பதிலளித்த திரு சிங், “ஏதேனும் முறையற்ற அல்லது தவறான விஷயம் நிகழ்ந்தால் அதைத் தீர்ப்பதற்கு பாட்டாளிக் கட்சி தயங்காது,” என்று கூறினார். இந்த விவகாரத்தைக் கட்சி தீவிரமாகக் கருதவில்லை என்று கூறுவது நியாயமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
வெளிநாட்டுத் தலையீடு, சமயம் மற்றும் அரசியலைக் கலப்பதன் ஆபத்துகள் குறித்து அரசாங்கம் அதன் அறிக்கையை ஏப்ரல் 25ஆம் தேதி வெளியிட்டதை திரு சிங் சுட்டிக்காட்டினார். மறுநாள் காலையில், பாட்டாளிக் கட்சி தனது சொந்த அறிக்கையை வெளியிட்டு, இந்த விவகாரம் குறித்து ஊடகங்களுடன் பேட்டியும் நடத்தியது.