சிங்கப்பூர் மேற்கொள்ளும் எந்தவொரு தொற்றுநோய்க் கட்டுப்பாட்டு முயற்சியிலும் பொதுமக்களின் நம்பிக்கை அவசியம் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.
“அதிகாரிகளும் அமைப்புகளும் மக்களிடம் உண்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்கிறார்கள் என்று மக்கள் நம்பும்போது பொதுச் சுகாதார நடவடிக்கைகளுக்கு ஆதரவாக அவர்கள் அணிதிரள்வார்கள்,” என்றார் பிரதமர்.
சிங்கப்பூரில் தொற்றுநோய்களைச் சமாளிக்க தொற்றுநோயைக் கண்டறிதல், கட்டுப்படுத்தல், தவிர்த்தலுக்கான அமைப்பு (சிடிஏ) புதன்கிழமை (நவம்பர் 12) அறிமுகம் கண்டது.
தேசியப் பல்கலைக்கழகக் கலாசார மையத்தில் நடைபெற்ற அறிமுக நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பிரதமர் வோங் உரையாற்றினார்.
சமுதாயக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சரும் சுகாதார அமைச்சருமான ஓங் யி காங்கும் சுகாதாரத் துணையமைச்சர் ரஹாயு மஹ்ஸாமும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
பொதுமக்களின் நம்பிக்கையைக் கட்டிக்காப்பதைத் தவிர, புதிய ‘சிடிஏ’ அமைப்பு அனைத்துலக ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என்றும் திரு வோங் தெரிவித்தார்.
இந்த முயற்சிகளை வழிநடத்த, தயார்நிலை, பகுப்பாய்வு, தடுப்பூசிகள் போன்ற முக்கியமான துறைகளில் ஆலோசனை வழங்க உலகப் புகழ்பெற்ற தொழில்நுட்ப, கொள்கை நிபுணர்களைக் கொண்ட ஓர் அனைத்துலக ஆலோசனைக் குழுவை அமைப்பு ஒன்றுசேர்த்துள்ளது.
“சிங்கப்பூர் தொடர்ந்து நோய் கண்காணிப்பு, புலனாய்வுப் பகிர்வு, தடுப்பூசிகள், ஆய்வு, மேம்பாடு ஆகியவற்றில் மற்ற நாடுகளிடையே ஒத்துழைப்பை மேம்படுத்தும்,” என்றார் பிரதமர் வோங்.
தொடர்புடைய செய்திகள்
அத்துடன், ‘சிடிஏ’ அமைப்பு தேசியத் தொற்றுநோய் எதிர்ப்பு திட்டங்களைப் புதுப்பிக்கும் முயற்சியில் இறங்கும் என்றும் அவர் கூறினார்.
“எங்கள் வளங்களை மதிப்பாய்வு செய்யவும் திறன்களை அதிகரிக்கவும் அமைப்பு அதன் பங்காளித்துவ அமைப்புகளுடன் நெருக்கமாக இணைந்து செயல்படும்,” என்று உறுதியளித்தார்.
‘சிடிஏ’ அமைப்புடன் சுகாதார அமைச்சு, தொற்றுநோய்களுக்கான தேசிய நிலையம், சுகாதார மேம்பாட்டு வாரியம் ஆகியவை இணைந்து மருத்துவம், கொள்கை, செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும்.
2003ல் சிங்கப்பூர் எதிர்கொண்ட சார்ஸ் நோய்த்தொற்றுக்கான தடுப்பு முயற்சிகள்போல் கொவிட்-19 பெருந்தொற்றுக்கான தடுப்பு முயற்சிகள் அமையவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், “சுகாதாரப் பராமரிப்பு, எல்லைக் கட்டுப்பாடு, பொருளியல் ஆதரவு, சமூக, கல்விச் சேவைகள் அனைத்தும் விரிவாகச் செயல்படுத்தப்பட்டன,” என்று நினைவுகூர்ந்தார்.
எனவே, பெருந்தொற்றிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களை மனத்தில்கொண்டு இந்தப் புதிய அமைப்பு தொற்றுநோய்களைக் கண்டறிவது, தடுப்பது, கட்டுப்படுத்துவது ஆகிய பொதுச் சுகாதார செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும்.
நோய் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளப் புதிய தொழில்நுட்பங்களை ‘சிடிஏ’ அமைப்பு பயன்படுத்தும்.
நோய்க்கிருமியைத் தொடக்கத்திலேயே கண்டறிந்து, திறன்களை வலுப்படுத்தி, ஒத்துழைப்பை மேம்படுத்தவும் ‘சிடிஏ’ அமைப்பு ஒரு விரிவான தேசியக் கண்காணிப்பு உத்தியை உருவாக்கி வருகிறது என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரியான பேராசிரியர் வெர்னன் லீ தெரிவித்தார்.
“கண்ணுக்குத் தெரியாத நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சிரமம். அதனால் நாம் அவற்றைச் சரிவர கண்டறிய வேண்டும்,” என்று அமைப்பின் நோக்கத்தை அவர் வலியுறுத்தினார்.
தொற்றுநோய் அச்சுறுத்தல்களைத் தடுப்பது, அவற்றுக்குச் சிங்கப்பூரைத் தயார்ப்படுத்துவது, அவற்றிலிருந்து நாட்டைப் பாதுகாப்பது எனும் அமைப்பின் பணிகளைக் காட்சிப்படுத்தும் கண்காட்சியையும் பிரதமர் பார்வையிட்டார்.
கொவிட்-19 பெருந்தொற்று, நாம் எதிர்கொண்ட கடைசிப் பெருந்தொற்று கிடையாது என்றார் பிரதமர் வோங்.
“எனவே, சிங்கப்பூர் எவ்வாறு தயாராக இருக்க முடியும் என்ற கேள்வியை நாம் கேட்பது அவசியம்,” என்று அவர் சொன்னார்.

