கடந்த பத்தாண்டுகளாக கோல்டன் மைல் டவரில் இயங்கி வந்த உள்ளூர் தனியார் திரையரங்கமான ‘தி புரொஜெக்டர்’ செயல்பாட்டை நிறுத்திக்கொள்வதாகச் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 19) அறிவித்தது.
“மாற்றுப் படங்கள், உள்ளூர் படைப்பாற்றல், சமூகம் சார்ந்த நடவடிக்கைகளை முன்னெடுத்த, திரையரங்கம் பத்தாண்டு காலத்துக்குப் பிறகு நிறுவனக் கலைப்புக்கு உட்படுத்தப்படுகிறது,” என்று இன்ஸ்டகிராம் பதிவில் அது தெரிவித்தது.
2014ல் தொடங்கப்பட்ட ‘தி புரொஜெக்டர்’ உடனடியாக மூடப்பட்டதால், ஆகஸ்ட் 19ஆம் தேதிக்குப் பின்னர் திட்டமிடப்பட்ட அனைத்து திரையீடுகளும் ரத்து செய்யப்படுகின்றன.
செயல்பாட்டு செலவுகள் அதிகரிப்பது, பார்வையாளர்களின் விருப்பங்கள் மாறிவிட்டது, சினிமா செல்வோர் எண்ணிக்கையின் உலகளாவிய வீழ்ச்சி ஆகியவற்றை மூடப்படுவதற்கான காரணங்களாக அது குறிப்பிட்டது. இவை சிங்கப்பூரில் தனிப்பட்ட ரீதியில் சினிமாவை நடத்துவது அதிக அளவில் கடினமாக்கியுள்ளதாக அது கூறியது.
இந்த அழுத்தங்களுடன், சிங்கப்பூர் கலை, கலாசாரத் துறையில் செயல்படுவதன் யதார்த்தமும் உள்ளது. தனிப்பட்ட முயற்சிகள் நாட்டின் பரிணமித்து வரும் கலாசாரப் பரப்பில் பங்களிக்கும் அதேநேரத்தில், வரையறுக்கப்பட்ட வளங்களுக்குள் செயல்பட வேண்டியுள்ளது என்று அவ்வமைப்பு குறிப்பிட்டது.

