தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தனியார் வீட்டு விலை அதிகரிப்பு; ‘செந்தோசா கோவ்’ விதிவிலக்கு

2 mins read
6416733d-2078-45f8-808e-0574564fd306
செந்தோசா கோவ் வட்டாரம். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் தனியார் வீடுகளின் விலை பொதுவாக அதிகரித்துவரும் வேளையில், செந்தோசா கோவ் வட்டாரத்தில் உள்ள வீடுகள் விதிவிலக்காக இருந்து வருகின்றன.

கடந்த ஜூலை மாதம் செந்தோசா தீவில் அமைந்துள்ள செந்தோசா கோவ் வட்டாரத்தில் இருக்கும் மரினா கலெக்‌ஷன் (Marina Collection) திட்டத்தில் உள்ள ஒரு மறுவிற்பனை வீடு 4.95 மில்லியன் வெள்ளிக்கு விற்கப்பட்டது. இந்த விலை, 2008ஆம் ஆண்டு அவ்வீட்டை வாங்க செலுத்தப்பட்ட தொகையைவிட 40 விழுக்காட்டுக்கும் மேல் குறைவாகும்.

3,772 சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ள அந்த வீடு, திட்டத்தின் சொத்து மேம்பாட்டாளரிடமிருந்து 2008ல் 8.63 மில்லியன் வெள்ளிக்கு வாங்கப்பட்டது.

சிங்கப்பூரின் தனியார் வீட்டு விலை தொடர்ந்து அதிகரிப்பது நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் ஆக அண்மைய புள்ளிவிவரங்களில் தெரிய வந்தது. ஆனால் செந்தோசா கோவ் வீடுகளின் விலையின் போக்கு நேர் எதிராக இருந்து வருகிறது.

செந்தோசா கோவ் வட்டாரத்தில் மறுவிற்பனை வீட்டுச் சந்தை சென்ற ஆண்டும் இவ்வாண்டும் மந்தமாகியிருப்பதை சொத்து கவனிப்பாளர்கள் சேகரித்துள்ள புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. அவ்வட்டாரத்தில் பாதிக்கும் மேலான மறுவிற்பனை வீடுகள் நட்டத்துக்கு விற்கப்பட்டன.

சென்ற ஆண்டு செந்தோசா கோவ் வட்டாரத்தில் உள்ள தனியார் தரை வீடு, அடுக்குமாடி மறுவிற்பனை வீடுகளில் சுமார் 59 விழுக்காடு வீடுகள் நட்டத்துக்கு விற்கப்பட்டன. இந்த ஆண்டு இதுவரை அவ்விகிதம் 66 விழுக்காட்டுக்குக் கூடியுள்ளது. ஈஆர்ஏ சிங்கப்பூர் சொத்து நிறுவனத்தின் ஆய்வு, சந்தைத் தகவல் பிரிவு வெளியிட்ட புள்ளிவிவரங்களில் இது தெரிய வந்தது.

அதேவேளை, சிங்கப்பூரின் முக்கிய மத்திய வட்டாரத்தில் மறுவிற்பனை கொண்டோமினிய வீட்டு விலை சராசரியாக அதிகரித்துள்ளது. 2023ல் ஒரு சதுர அடிக்கு சராசரியாக 2,081 வெள்ளியாக இருந்த விலை சென்ற ஆண்டு 2,111 வெள்ளியாகவும் இவ்வாண்டு ஜனவரியிலிருந்து செப்டம்பர் மாதத்துக்கு இடைப்பட்ட காலத்தில் 2,186 வெள்ளியாகவும் அதிகரித்துள்ளது.

இந்தப் புள்ளிவிவரங்கள், 2,160 தனியார் வீடுகள் உள்ள செந்தோசா கோவ் வட்டாரம் தொடர்ந்து குறிப்பிட்ட, சொகுசு வாழ்க்கையில் நாட்டம் கொண்டவர்களை மட்டுமே ஈர்ப்பதைக் காட்டுவதாக சொத்துச் சந்தை கவனிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்