ஜி20 உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் வோங் தென்னாப்பிரிக்கா பயணம்

2 mins read
26369e56-36f9-4a8d-a5a6-db077ba4a518
ஜோகன்னஸ்பர்க் எக்ஸ்போ மையத்தில் நடைபெறும் 2025 கூட்டம், ஆப்பிரிக்க நாடு ஒன்றால் நடத்தப்படும் முதல் கூட்டமாகும். - படம்: ராய்ட்டர்ஸ்

பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங் நவம்பர் 21 முதல் 23 வரை தென்னாப்பிரிக்காவில் இருப்பார். அங்கு அவர் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெறும் வருடாந்தர ஜி20 தலைவர்கள் உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்வார்.

பின்னர் அவர் நவம்பர் 23 முதல் 25 வரை எத்தியோப்பியாவிற்கு அதிகாரபூர்வ வருகை மேற்கொள்வார்.

நவம்பர் 22ஆம் தேதி தொடங்கும் இரண்டு நாள் ஜி20 கூட்டத்தில், உலகின் ஆகப்பெரிய முன்னணி மற்றும் வளர்ந்து வரும் பொருளியல் நாடுகளின் தலைவர்கள் ஒன்றுகூடி, பருவநிலை மாற்றம், சமத்துவமின்மை, பசி மற்றும் வறுமை, புவிசார் அரசியலின் உறுதியற்ற தன்மை போன்ற ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட உலகளாவிய பிரச்சினைகள் பற்றி விவாதிக்க உள்ளனர்.

ஜோகன்னஸ்பர்க் எக்ஸ்போ மையத்தில் நடைபெறும் 2025 கூட்டம், ஆப்பிரிக்க நாடு ஒன்றால் நடத்தப்படும் முதல் கூட்டமாகும்.

உலகம் சிக்கலான மற்றும் அவசர சவால்களை எதிர்கொண்டு வரும் வேளையில் இந்த உச்சநிலை மாநாடு நடைபெறுவதாகவும், இந்தச் சவால்கள் பலவற்றிற்கான தீர்வுகளை ஆப்பிரிக்க கண்டத்திலேயே காணலாம் என்றும் தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா கூறியுள்ளார்.

செயற்கை நுண்ணறிவின் விரைவான வளர்ச்சி, வேலையின் மாறிவரும் தன்மைக்கு மத்தியில், நிலையான வளர்ச்சியை ஊக்குவித்தல், நியாயமான எதிர்காலத்தை வளர்த்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட விவாதங்களில் பிரதமர் வோங் பங்கேற்பார் என்று பிரதமர் அலுவலகம் நவம்பர் 20ஆம் தேதி ஓர் அறிக்கையில் தெரிவித்தது.

சிங்கப்பூர் ஜி20 அமைப்பில் உறுப்பினராக இல்லை. ஆனால் ஒரு விருந்தினர் நாடாக கிட்டத்தட்ட கடந்த 20 ஆண்டுகளாக பலதரப்புக் கருத்தரங்கில் பங்கேற்று வந்துள்ளது.

திரு ராமபோசாவின் அழைப்பின் பேரில் பிரதமர் வோங் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.

தனது பயணத்தின் இரண்டாம் கட்டத்தில், பிரதமர் வோங் எத்தியோப்பியாவின் பிரதமர் அபி அகமது அலியின் அழைப்பின் பேரில் அங்கு செல்வார்.

இந்தப் பயணம், பிரதமர் வோங் பதவியேற்ற பிறகு ஆப்பிரிக்காவிற்கு மேற்கொள்ளும் முதலாவது இருதரப்பு பயணமாகும். இது 54 நாடுகளைக் கொண்ட உலக மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்ட ஆப்பிரிக்கக் கண்டத்தில் சிங்கப்பூர் அளிக்கும் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

குறிப்புச் சொற்கள்