தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உலக வர்த்தக அமைப்பைச் சீரமைக்க பிரதமர் வோங் அழைப்பு

2 mins read
be600694-14f4-4663-a443-19f58fd5ed2f
ஏபெக் மாநாட்டில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 31) உரையாற்றிய பிரதமர் லாரன்ஸ் வோங். பசுமைப் பொருளியல் பங்காளித்துவ உடன்பாட்டில் கையெழுத்திடும் முன்னர் அவர் அந்த மாநாட்டில் பேசினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

காலத்திற்குப் பொருத்தமானதாகவும் ஆற்றல்மிக்கதாகவும் திகழும் வகையில் உலக வர்த்தக அமைப்பைச் சீர்திருத்தம் செய்து வலுவூட்ட வேண்டிய அவசியம் ஏபெக் அமைப்பின் தலைமைத்துவத்துக்கு ஏற்பட்டுள்ளதாக சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.

ஏபெக் எனப்படும் ஆசிய பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு அமைப்பின் வருடாந்தர உச்சநிலைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசியபோது அவர் இந்தக் கருத்தை வலியுறுத்தினார்.

தென்கொரியாவின் கியோங்ஜு நகரில் நடைபெற்று வரும் அந்தக் கூட்டத்தின் ஓர் அங்கமாக வெள்ளிக்கிழமை (அக்டோபர் 31) நடைபெற்ற ஏபெக் பொருளியல் தலைவர்களின் சந்திப்பில் கலந்துகொண்டு திரு வோங் உரையாற்றினார்.

உலக வர்த்தக அமைப்பு ஆற்றலுடன் இயங்காமற்போனால் அதனைப் புறக்கணித்துக் கைவிடுவதற்குப் பதில் மேம்படுத்தும் முயற்சிகளில் நாடுகள் ஈடுபடவேண்டும் என்றார் பிரதமர்.

உலகப் பொருளியல் சிரமங்களைச் சந்தித்து வரும் நிலையிலும் நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு அழுத்தத்திற்கு ஆளாகி இருக்கும் நிலையிலும் இவ்வாண்டின் ஏபெக் கூட்டம் நடைபெறுவதாக அவர் சுட்டினார்.

“உலக வர்த்தக அமைப்பின் தற்போதைய ஒருமித்த கொள்கைகள் பாதிப்பை எதிர்நோக்கும் நிலையில், விளைவுகளுக்கு ஏற்ப முடிவெடுக்கக்கூடிய அதன்புதிய வழிமுறைகளுக்கு ஏபெக் உறுப்பு நாடுகள் ஆதரவளிக்க வேண்டும்.

“அத்துடன், நீக்குப்போக்கான பலதரப்பு முயற்சிகளையும் அவை தழுவ வேண்டும். அவ்வாறு செய்வதன் வாயிலாக, ஒரே மாதிரியான கருத்துடைய நாடுகள் புதிதாக உருவெடுக்கும் பிரச்சினைகளை உடனடியாக சமாளிக்க இயலும். அதன் பின்னர் இயன்றபோது மற்ற நாடுகள் அவற்றுடன் இணைந்து செயலாற்ற முடியும்,” என்றார் திரு வோங்.

உலக வர்த்தக அமைப்பின் ஒட்டுமொத்த விதிமுறைகளில் சீர்திருத்தம் செய்ய அதன் தலைவர் இங்கோஸி ஓகோன்ஜோ இவெலா அழைப்பு விடுத்திருந்ததைத் தொடர்ந்து பிரதமர் வோங்கின் கருத்து வெளியாகி உள்ளது.

உலக வர்த்தக நடவடிக்கைகளைப் பாதுகாக்க அமைப்பின் 166 உறுப்பு நாடுகளிடையே ஒருமித்த உடன்பாடு தேவை என்றும் டாக்டர் ஓகோன்ஜோ இவெலா கூறியிருந்தார்.

குறிப்பாக, உலகளாவிய வர்த்தக முறை எண்பது ஆண்டு காணாத சீர்குலைவைச் சந்தித்து வரும் நிலையில் புதிய அணுகுமுறை தேவைப்படுவதாகவும் அவர் கடந்த செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 28) தெரிவித்து இருந்தார்.

அதனைத் தொடர்ந்து, 2026 மார்ச் மாதம் கெமரூனில் உலக வர்த்தக அமைப்பின் உறுப்பினர்கள் சந்திக்கும்போது சீர்திருத்த நடைமுறைகளைத் தொடங்குவதற்குத் தேவைப்படும் அரசியல் ஆதரவை வழங்க இதர ஏபெக் தலைவர்கள் தெரிவித்ததை திரு வோங் எதிரொலித்துள்ளார்.

முப்பதாண்டு பழமையான உலக வர்த்தக அமைப்பின் உறுப்பினர்கள் ஈராண்டுக்கு ஒருமுறை சந்தித்துப் பேசுவர். அப்போது முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள் அந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்