சிங்கப்பூர் நாடாளுமன்றம் அதன் உறுப்பினர்கள் அமரும் இருக்கை விவரங்களை வெளியிட்டுள்ளது.
15வது தவணைக்கான நாடாளுமன்றம் செப்டம்பர் 5ஆம் தேதி கூடுகிறது.
பிரதமர் லாரன்ஸ் வோங்கின் பக்கத்தில் துணைப் பிரதமர் கான் கிம் யோங், தேசிய பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் கா. சண்முகம் ஆகியோர் அமர்ந்திருப்பார்கள்.
இவர்களுக்கு அடுத்ததாக பிரதமருக்கு நெருக்கமாக மூத்த அமைச்சர் லீ சியன் லூங், பொதுச் சேவைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் சான் சுன் சிங், சமுதாயக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் ஓங் யி காங் ஆகியோர் அமரும் வகையில் இருக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன.
தற்போதைய நாடாளுமன்ற அமர்வில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
முன்பு பிரதமர் வோங், மூத்த அமைச்சர் லீ சியன் லூங்குக்கும் அப்போதைய துணைப் பிரதமர் ஹெங் சுவி கியாட்டுக்கும் நடுவில் அமர்ந்திருந்தார்.
நாடாளுமன்றம் உறுப்பினர்கள் அமரும் இருக்கை விவரங்களை இன்று (ஆகஸ்ட் 21) வெளியிட்டது.
அதில் 99 உறுப்பினர்களுக்கும் நாடாளுமன்ற பாரம்பரிய முறைப்படி குறிப்பிட்ட இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
நாடாளுமன்ற நாயகரின் வலப்பக்கத்தில் அமைச்சரவை உறுப்பினர்கள், அரசியல் பதவி வகிப்பவர்களுக்கு இடமளிக்கப்பட்டுள்ளது.
முதல் வரிசையில் பிரதமர் வோங், நாயகரிடமிருந்து ஒன்பது இருக்கைகளுக்கு அப்பால் நடுவில் உள்ள இருக்கையில் அமர்ந்திருப்பார்.
அவரது வலதுபக்கத்தில் துணைப் பிரதமர் கான் கிம் யோங்கும் இடது பக்கத்தில் திரு சண்முகமும் அமர்வார்கள்.
எஞ்சிய வரிசைகளில் அமைச்சர்கள் அமர்வார்கள். முதல் வரிசையில் மொத்தம் 18 இருக்கைகள் உள்ளன.
அவையின் தலைவராக பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா நீடிப்பார். இவருக்கு நாடாளுமன்ற நாயகருக்கு அருகே இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.
சபாநாயகரின் வலது பக்கத்தில் மூத்த துணை அமைச்சர்கள், துணை அமைச்சர்கள், மூத்த நாடாளுமன்றச் செயலாளர்களுக்கு இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன.
இடது பக்கத்தில் உள்ள பல இருக்கைகளில் முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமர்வார்கள்.
நாயகரின் இடது பக்கத்தில் உள்ள முதல் வரிசையில் எதிர்க்கட்சித் தலைவர் பிரித்தம் சிங் அமர்வார். பிரதமர் லாரன்ஸ் வோங்குக்கு நேர் எதிரே இவரது இருக்கை அமைந்துள்ளது.
திரு பிரித்தம் சிங்கைச் சுற்றி முதல் வரிசையில் அரசாங்க நாடாளுமன்றக் குழுவின் தலைவர்கள் அமர்வார்கள்.
இவர்கள், அரசாங்கக் கொள்கையை ஆராயும் மசெக உறுப்பினர்களின் குழுக்களைச் சேர்ந்தவர்கள்.
மொத்தம் 12 நாடாளுமன்ற குழுக்கள் உள்ளன. கடந்த ஜூலை மாதம் நாடாளுமன்றக் குழுக்களுக்கு புதிய தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தொழிற்சங்கத் தலைவர் இங் சீ மெங்கும் இதே வரிசையில் அமர்வார்.
இடது பக்கத்தில் உள்ள எஞ்சிய இடங்கள் மக்கள் செயல் கட்சி, பாட்டாளிக் கட்சி உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
15வது நாடாளுமன்றத்தில் 87 மக்கள் செயல் கட்சி உறுப்பினர்களும் 12 பாட்டாளிக் கட்சி உறுப்பினர்களும் இருக்கின்றனர்.
ஆளும் கட்சியின் 87 உறுப்பினர்களில் 24 பேர், மே 3ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். இதே கட்சியைச் சேர்ந்த 20 உறுப்பினர்கள் ஓய்வு பெற்றனர்.
பாட்டாளிக் கட்சியைப் பொருத்தவரை ஐவர் புதிய முகங்கள். இவர்களில் தொகுதியில்லா நாடளுமன்ற உறுப்பினர்களான எய்லின் சோங், ஆண்ட்ரி லோ ஆகியோரும் அடங்குவர். தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாயகரின் இடது பக்கத்தில் மூன்றாவது வரிசையில் கடைசியில் அமர்வார்கள்.
நான்காவது வரிசையில் மொத்தம் 13 இருக்கைகள் காலியாக இருக்கும். நியமன நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக இவை ஒதுக்கப்பட்டுள்ளன.

