இவ்வாண்டின் தொடக்கப் பள்ளி இறுதியாண்டுத் (பிஎஸ்எல்இ) தேர்வு முடிவுகள் நவம்பர் 25ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சும் சிங்கப்பூர் தேர்வு, மதிப்பீட்டுக் கழகமும் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 18) இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் இதனைத் தெரிவித்தன.
மாணவர்கள் தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொள்வதன் தொடர்பிலான விவரங்களை மாணவர்கள், தங்கள் பள்ளிகளிடமிருந்து பெறலாம்.
தங்களால் பள்ளிக்குச் சென்று முடிவுகளைப் பெற்றுக்கொள்ள முடியாதோர், நவம்பர் 27ஆம் தேதியன்று தங்கள் சார்பில் வேறொருவரை அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம்.
நவம்பர் 25ஆம் தேதி காலை 11.30 மணி முதல் டிசம்பர் 1ஆம் தேதி மாலை 4.30 மணிவரை கல்வி அமைச்சின் இணையத்தளம் மூலம் உயர்நிலைப் பள்ளிக்கானத் தெரிவுகளைத் தேர்ந்தெடுக்கலாம்.
இணையம்வழி படிவங்களைச் சமர்ப்பிக்க உதவி தேவைப்படும் பெற்றோர் டிசம்பர் 1ஆம் தேதி பிற்பகல் 4.30 மணிக்குள் பள்ளிகளை நாடலாம்.
மாணவர்களுக்கு எந்த உயர்நிலைப் பள்ளி கிடைத்தது என்ற தகவல் டிசம்பர் 18ஆம் தேதி அல்லது டிசம்பர் 19ஆம் தேதியன்று குறுந்தகவல் மூலம் தெரிவிக்கப்படும் என்று கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
கல்வி அமைச்சின் இணையத்தளம் மூலம் அல்லது மாணவரின் தொடக்கப்பள்ளியிடம் இருந்தும் அத்தகவலைப் பெற்றுக்கொள்ள முடியும்.

