சேவை மனப்பான்மை கொண்ட மூவருக்கு அதிபர் கல்விமான் விருது

2 mins read
c864c98f-4f3f-4c82-8f0c-6c419b7ea8fb
(இடமிருந்து) அதிபர் கல்விமான் விருது பெற்ற ஹில்லரி சீ, கேலப் டியோ, கிளேரிசா குயென். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நீதிக்காகக் குரல் கொடுப்பதிலிருந்து இன்னும் பசுமையான, அனைவரையும் உள்ளடக்கிய நாட்டை உருவாக்க இளம் அறிவியலாளர்களை உற்சாகப்படுத்துவது வரை இவ்வாண்டின் அதிபர் கல்விமான் உபகாரச் சம்பளம் பெற்ற மூன்று இளையரும் மக்களுக்குச் சேவை செய்வதையே தலையாயக் குறிக்கோளாகக் கொண்டுள்ளனர்.

குமாரி ஹிலரி சீ, 18, குமாரி கிளேரிஸா குயென், 19, திரு கேலப் டியோ, 19 ஆகிய மூவரும் தங்களது தனிப்பட்ட விருப்பங்களைச் சமூகத்துக்குத் தொண்டு செய்யும் திட்டங்களாக மாற்றியுள்ளனர்.

சமூகத்தில் வெளிநாட்டு ஊழியர்களை ஒருங்கிணைப்பது, வானியலில் பெண்களுக்கு வழிகாட்டுதல், வசதி குறைந்த குடும்பங்களுக்கு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல் ஆகியவை அவற்றுள் அடங்கும்.

ஃபுல்லர்டன் ஹோட்டலில் நடைபெற்ற சடங்குபூர்வ நிகழ்ச்சியில் அதிபர் தர்மன் சண்முகரத்னம் மூவருக்கும் அதிபர் கல்விமான் விருதை வியாழக்கிழமை (ஆகஸ்ட் 14) வழங்கினார்.

தற்காப்பு அமைச்சரும் பொதுச் சேவைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு சான் சுன் சிங், திரு தர்மனின் துணைவி திருவாட்டி ஜேன் இத்தோகி ஆகியோருடன் கிட்டத்தட்ட 70 விருந்தினர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

அரசாங்கத் துறை பல உபகாரச் சம்பளங்களை இளம் சிங்கப்பூரர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கினாலும் தலைமைத்துவம் பண்புகள் போன்ற நெறிமுறைகளைக் கொண்டு அனைத்து வகையிலும் தலைசிறந்தவர்கள் என்று அரசாங்கச் சேவை ஆணையம் மதிப்பிடுவோருக்கு அதிபர் கல்விமான் உபகாரச் சம்பளம் வழங்கப்படுகிறது என்று அதிபர் தர்மன் கூறினார்.

ஹுவா சோங் கல்வி நிலையத்தைச் சேர்ந்த திரு டியோ, ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழகத்திற்குச் செல்லவிருக்கிறார். ராஃபிள்ஸ் கல்வி நிலையத்தைச் சேர்ந்த குமாரி சீயும் குமாரி குயெனும் மசாசுசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்துக்கும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துக்கும் செல்லவிருக்கின்றனர்.

அதிபர் கல்விமான் உபகாரச் சம்பளத்தைப் பெறுவது ஒரு வரப்பிரசாதம் என்று அதிபர் தர்மன் தமது உரையில் குறிப்பிட்டார்.

“அது உங்கள் தலைக்கு ஏறவேண்டாம். அடுத்தவர்களைவிட நாம் மேன்மையானவர்கள் என்று எண்ணிவிடவும் வேண்டாம்,” என்றார் அவர்.

அந்தக் கல்விமான் உபகாரச் சம்பளம், நாட்டு மக்களுக்குச் சேவையாற்றுவதில் திறனை எல்லாம் செலவிடவேண்டும் என்ற கூடுதல் பொறுப்பைத் தருகிறது என்றார் அதிபர் தர்மன்.

குறிப்புச் சொற்கள்