மேம்பட்ட உறவை நாடும் சிங்கப்பூர்- போலந்து தலைவர்கள்

2 mins read
312382db-68b4-4b68-bf0f-c3942f92de32
ஜூன் 11 முதல் ஜூன் 13வரை சிங்கப்பூருக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டுள்ள போலந்து அதிபர் ஆன்டர்ஸெஷ் டுடாவுடன் பிரதமர் லாரன்ஸ் வோங் (வலது). - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

சவால்மிக்க வர்த்தக, உலக அரசியல் சூழலில் போலந்துடனான  உறவை வலுப்படுத்தவும் அந்நாட்டுடன் அணுக்கமாகப் பணியாற்றுவதையும் தாம் எதிர்பார்த்திருப்பதாக பிரதமர் லாரன்ஸ் வோங் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) தெரிவித்தார்.

போலந்து அதிபர் ஆன்டர்ஸெஷ் டுடாவுடனான தமது சந்திப்பு குறித்து வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், மத்திய, கிழக்கு ஐரோப்பாவில் போலந்து சிங்கப்பூரின் முக்கிய பங்காளியாகத் திகழ்வதாகப் பிரதமர் வோங் கூறினார்.

இவ்விரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம், முதலீடு, மக்கள் உறவுகள் இருப்பதாகவும் அவர் கூறினார்.

“கூட்டாக மேலும் பலவற்றைச் செய்வதற்கு நமக்கு ஏராளமான ஆற்றல் உள்ளது,” என்றும் திரு வோங் கூறினார். 

தளவாடம், உணவுப் பாதுகாப்பு, துறைமுக மேம்பாடு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் திரு டுடாவுடன் கலந்துரையாடியிருப்பதாகப் பிரதமர் வோங் தெரிவித்தார்.

சிங்கப்பூருக்கு மூன்று நாள் பயணத்தை திரு டுடா மேற்கொண்டார். ஜூன் 11 முதல் ஜூன் 13வரை அவர் சிங்கப்பூரில் இருந்தார். இது, 20 ஆண்டுகளில் சிங்கப்பூருக்கு போலந்து அதிபர் ஒருவர் மேற்கொண்டுள்ள முதல் பயணமாகும். 

இரண்டு நாடுகளையும் ஒன்றிணைக்க போலந்து கொண்டுள்ள அரசியல் முடிவை சிங்கப்பூருக்கான தமது வருகை பிரதிபலிப்பதாகத் திரு டுடா, ஜூன் 13ஆம் தேதியன்று நடைபெற்ற வர்த்தகக் கருத்தரங்கில் தெரிவித்தார்.

“உலக வர்த்தக உறவின் புதிய கட்டத்திற்குள் உலகம் புகுந்துவிட்டது. பன்முகமயமாதல், மீள்திறன், நம்பிக்கைமிகு பங்காளித்துவம் ஆகியவை வெற்றியை உறுதிப்படுத்தும்,” என்று அவர், சிங்கப்பூரின் ஷங்ரிலா வர்த்தகத் தலைவர்கள் கலந்துரையாடலின்போது கூறினார். 

போலந்து, சிங்கப்பூர் பங்காளித்துவம், அந்தப் புதிய உலக கட்டமைப்பில் அங்கம் வகிக்கக்கூடும் என்றும் அவர் கூறினார். 

மேம்பட்ட உற்பத்தித்துறை, உணவுப் பொருள்கள், தளவாடம், வர்த்தகத்திற்கு வசதியளித்தல் உள்ளிட்ட அம்சங்களில் இணைந்து பணியாற்றும் வாய்ப்புகள் இருப்பதாகவும் திரு டுடா கூறினார்.

குறிப்புச் சொற்கள்