மாறுபட்ட பாலின விருப்பங்கள் உள்ளவர்களை அங்கீகரிக்கும் ‘பிங்க் டாட் எஸ்ஜி’ எனபப்படும் சிங்கப்பூர் இளஞ்சிவப்புப் புள்ளியின் பேரணிக்காக ஹோங் லிம் பார்க் திடலில் இளஞ்சிவப்பு சட்டை அணிந்த ஆயிரணக்கணக்கானோர் சனிக்கிழமை (ஜூன் 28) மாலை திரண்டனர்.
மழை பெய்தபோதும் 17ஆவது முறையாக நடைபெறும் இந்தப் பேரணியில் கூடியிருந்தவர்களின் உற்சாகம் குறையவில்லை.
மக்கள் செயல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அலெக்ஸ் இயே, இங் ஷி ஷுவான் ஆகியோரும் பாட்டாளிக் கட்சியைச் சேர்ந்த ஹே டிங் ரூ, லுவிஸ் சுவாவும் வருகையளித்தனர்.
மாறுபட்ட பாலின விருப்பங்களுடன் தொடர்புடைய 60க்கும் அதிகமான பொருள்களைக் கொண்ட காலப்பெட்டகமும் நிகழ்ச்சியின்போது மூடி வைக்கப்பட்டது. உள்ளூர் வடிவமைப்பாளர் நிக்கலஸ் ஹோ அந்தப் பெட்டகத்தை வடிவமைத்தார்.
சான் ஃபிரான்சிஸ்கோவில் ஓரினத் திருமணம் செய்துகொண்ட திரு பாஸ்கரன், அந்தத் திருமணச் சான்றிதழைப் பெட்டகத்திற்கு தானம் செய்தார். சிங்கப்பூரில் ஒருநாள் தமது இணையரைத் திருமணம் செய்ய அவர் விரும்புகிறார்.
ஓரின உறவைக் குற்றச்செயலாகக் கருதிய 377ஏ சட்டத்தை சிங்கப்பூர் 2022ல் ரத்து செய்ததது.
மூடப்பட்ட காலப்பெட்டகம், 2050ல் மீண்டும் திறக்கப்படும் . அந்த ஆண்டு, புதிய எதிர்காலத்தைக் குறிக்கும் என்று சிங்கப்பூர் இளஞ்சிவப்புப் புள்ளியின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
அன்பு, மீள்திறன் ஆகியவற்றை அந்தக் காலப்பெட்டகம் நினைவுபடுத்துவதாக ‘பிங்க் டாட்’ பேச்சாளர் கிளெமண்ட் டான் தெரிவித்தர்.