கடந்த ஆண்டு 12.5 மில்லியன் வெள்ளி மதிப்பிலான நிதி நன்கொடை, கலைப்பொருள்கள் நன்கொடை உள்ளிட்ட பங்களிப்பைச் செய்த 64 பேர் இவ்வாண்டுக்கான மரபுடைமைப் புரவலர் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.
சிங்கப்பூரின் பாரம்பரியத்தை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் நன்கொடையளித்தோரைக் கொண்டாடிய மரபுடைமைப் புரவலர் விருது (POHA) வழங்கும் விழா, புதன்கிழமை (நவம்பர் 19) சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகத்தில் நடைபெற்றது.
தேசிய மரபுடைமைக் கழகம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கலாசார, சமூக, இளையர்துறைத் தற்காலிக அமைச்சரும் கல்வி அமைச்சின் மூத்த துணையமைச்சருமான டேவிட் நியோ சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
“பன்முக கலாசாரம் கொண்ட, ஒருங்கிணைந்த சமூகமாக நமது அடையாளத்தை வழிநடத்துவது பாரம்பரியம்தான். சிங்கப்பூரின் பாரம்பரியத்தைத் துடிப்பானதாகவும் உயிரோட்டத்துடனும் வைக்க புரவலர்கள் ஆதரவளித்துள்ளனர்,” என்று திரு நியோ பாராட்டினார்.
“நன்கொடையாளர்களும் ஆதரவாளர்களும் சிங்கப்பூரின் பாரம்பரியத்தை மேலும் துடிப்பானதாகவும், உள்ளடக்கியதாகவும், உயிரோட்டமானதாகவும் மாற்றியுள்ளனர். நிறுவனங்கள், சமூகங்கள், தனிமனிதர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து ஆதரவளிப்பது பாரம்பரியத்தைச் செழித்து நிலைபெறச் செய்யும்,” என்றார் அவர்.
இவ்வாண்டு, ஆசிய நாகரிக அரும்பொருளகத்தின் மேம்பாடுகளுக்காக நிதி நன்கொடை, பெரனாக்கன் அரும்பொருளகத்தின் ‘பாத்திக்’ கண்காட்சிக்கான நன்கொடை, தேசிய அரும்பொருளகத்தின் சிங்கப்பூர்க் கதைகள் கண்காட்சிக்கான நன்கொடை எனப் பல வழிகளில் ஆதரவளித்தோர்க்கு விருதுகள் வழங்கப்பட்டன.
தமிழ் முரசில், தமிழ்மொழி விழாவுக்கான விளம்பரப் பக்கங்களை வழங்கியது உள்ளிட்ட பங்களிப்பிற்காக எஸ்பிஎச் மீடியாவுக்கும் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.
2016 முதல் வளர்தமிழ் இயக்கம் நடத்திவரும் தமிழ்மொழி விழாவிற்கு ஆதரவளித்துவரும் யுவபாரதி அனைத்துலகப் பள்ளிக்கும் விருது வழங்கிச் சிறப்பித்தது தேசிய மரபுடைமைக் கழகம்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், நிலைத்தன்மையை ஒட்டிய சிங்கப்பூரின் வளர்ச்சியைப் பதிவுசெய்ய ஏதுவாக, சிங்கப்பூரில் தயாரிக்கப்பட்ட ஐந்து ‘ஹியூண்டே அயோனிக்’ வகை மின்சார வாகனங்கள் தேசிய அரும்பொருளகத்துக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன.
இவ்வாண்டு மரபுடைமைக்கான கௌரவப் புரவலர் விருது ‘சன்டெக் சிங்கப்பூருக்கு’ வழங்கப்பட்டது. மூன்று நிறுவனங்களுக்குப் புரவலர் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.
தனிமனிதர்கள், நிறுவனங்கள் என 16 பேருக்கு மரபுடைமைத் தோழர் விருதும், 34 பேருக்கு மரபுடைமை ஆதரவாளர் விருதும் வழங்கப்பட்டன.
தேசிய மரபுடைமைக் கழகத்துக்கு அளித்த நிதி ஆதரவுக்காக ‘மரபுடைமை ஆதரவாளர் விருது’ பெற்றார் திருவாட்டி கோபி மிர்சந்தானி.
“இந்திய, சீன இணையரின் மகளாகப் பிறந்ததாலேயே சிங்கப்பூரில் பன்முகக் கலாசாரம் குறித்த புரிதலின் முக்கியத்துவம் புரிகிறது. கலாசாரப் புரிதலை அனைவரிடமும் கொண்டு சேர்ப்பதில் அரும்பொருளகங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. குறிப்பாகச் சிறு பிள்ளைகளிடம் அதனைக் கொண்டுசேர்க்க உதவுகின்றன,” என்றார் திருவாட்டி கோபி.
“சிங்கப்பூரின் இந்தத் தனித்துவத்தைக் கொண்டாடும், பாதுகாக்கும் அரும்பொருளகங்களுக்கு ஆதரவளிப்பது முக்கியம் என நினைத்துப் பங்களித்தேன்.” என்றும் அவர் சொன்னார்.
தமிழ்மொழி விழாவை ஆண்டுதோறும் விரிவடையச் செய்யும் முயற்சிகளுக்கு இந்த நன்கொடைகள் ஆதரவளிக்கின்றன. இந்தியக் கலாசாரத்தைப் போற்றிப் பாதுகாக்கும் முக்கிய அமைப்பான இந்திய மரபுடைமை நிலையமும் இந்த நன்கொடைகளால் பயன்பெறுகிறது.
“நமது கலாசார நிலப்பரப்பின் முக்கியப் பகுதியாகத் திகழும் இந்திய மரபுடைமை நிலையம், இந்த நன்கொடைகளால் பயனடைந்துள்ளது. அத்துடன், சிங்கப்பூருக்கு இந்திய சமூகத்தின் வளமான வரலாறு மற்றும் பங்களிப்புகளைப் பாதுகாப்பதற்கும் கொண்டாடுவதற்கும் ஒரு தளத்தை வழங்குகிறது,” என்றார் கழகத்தின் மொழிப் பிரிவு மேலாளர் தாஷினி பாலச்சந்திரன்.
மேலும், அவை சமூகத்தின் கலாசாரக் கட்டமைப்பை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்லும் நம்பிக்கையை அளிப்பதாகவும் அவர் கூறினார்.

