தமிழ் வள்ளல் என்றும் தமிழ்த் தொண்டர் என்றும் போற்றப்படும் ஜோஸ்கோ பயண நிறுவன உரிமையாளர் நாகை திரு இரா. தங்கராசு (எ) போப் ராஜுவின் மறைவு சிங்கைத் தமிழ் அமைப்புகளுக்கு மட்டுமின்றிச் சிங்கைத் தமிழ்ச் சமூகத்திற்கும் பேரிழப்பு என்று அவரது நினைவஞ்சலிக் கூட்டத்தில் இரங்கலுரை ஆற்றியவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ் மொழிக்கும் தமிழ் அமைப்புகளுக்கும் தயங்காது வாரி வழங்கிய வள்ளல் என்றும் மற்றவர்களுக்கு உதவி செய்யத் தயங்காதவர் என்றும் போப் ராஜுவின் பண்புகளையும் குணநலன்களையும் பல்வேறு சம்பவங்கள் மூலம் விரிவாக எடுத்துரைத்து அவர்கள் பாராட்டினர்.
பேராசிரியர் சுப. திண்ணப்பன், மலேசியாவின் முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் எம். சரவணன், மலேசிய எழுத்தாளர் திரு கோவி. குட்டப்பன், தமிழ் நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் மறைமலை இலக்குவனார், கவிஞர் தங்கம் மூர்த்தி, திரு பாரதி கிருஷ்ணகுமார், புலவர் இராமலிங்கம், கவிஞர் தஞ்சை கூத்தரசன், திரு ஸ்டாலின் குணசேகரன் ஆகியோர் காணொளி வழியாக அனுப்பியிருந்த இரங்கலுரைகளும் கவிச்சுடர் கவிதைப்பித்தன் அனுப்பியிருந்த இரங்கல் கவிதையும் நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்டன.
தமிழர் பேரவை, சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம், சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், கவிமாலை, சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியக் களம், மக்கள் கவிஞர் மன்றம் ஆகிய ஆறு அமைப்புகளும் இணைந்து திரு போப் ராஜுவின் நினைவஞ்சலிக் கூட்டத்திற்கு ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 26) ஏற்பாடு செய்திருந்தன.
திரு போப் ராஜ் மே மாதம் 5ஆம் தேதி இயற்கை எய்தினார். அவரது குடும்பத்தைச் சேர்ந்த பலரும் அந்த நினைவஞ்சலிக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
சுமார் 70 பேர் கலந்துகொண்ட அந்த நினைவஞ்சலிக் கூட்டம் மதிய உணவுடன் நிறைவு பெற்றது.


