தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தீப்பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்ற பாசிர் பாஞ்சாங் மொத்த விற்பனை நிலைய கடைகளுக்குக் கெடு

2 mins read
88ec76e9-eb9a-4078-a05e-71e58f31be36
பாசிர் பாஞ்சாங் மொத்த விற்பனை நிலையத்தில் உள்ள கடைகள் அனைத்தும் அடுத்த ஆண்டுக்குள் தீப்பாதுகாப்புக் கருவிகளைப் பொருத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பாசிர் பாஞ்சாங் மொத்த விற்பனை நிலையம் (ஹோல்சேல் சென்டர்) தனது குத்தகை நீட்டிப்பைப்பெற அங்கிருக்கும் அத்தனை கடைகளும் தீப்பாதுகாப்பு விதிகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

அவ்வாறு கடைப்பிடித்தால்தான் குத்தகை நீட்டிப்பு வழங்கப்படும் என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு (எஸ்எஃப்ஏ)  இன்று (ஆகஸ்ட் 29) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.

ஏறத்தாழ 200 கடைகளை உள்ளடக்கிய 1,200 சிறுகூடங்களைக் கொண்ட அந்த நிலையத்தின் குத்தகைக் காலம் அடுத்த ஆண்டு காலாவதியாகிறது.

அந்தக் குத்தகையை 2040ஆம் ஆண்டுவரை நீட்டிக்க, சம்பந்தப்பட்ட அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாக எஸ்எஃப்ஏ தெரிவித்துள்ளது.

“இருப்பினும், தீப்பாதுகாப்பு விதிகளை முறையாகப் பின்பற்றப்படாத நிலை அடுத்த ஆண்டு இறுதிக்குள் மாறவேண்டும்,” என்று அந்த அமைப்பு வலியுறுத்தி உள்ளது.

மொத்த விற்பனை நிலையத்தின் பொதுவான பகுதிகளில் தீயணைப்புக்கு உதவும் நீர்தெளிப்பான்களை நிறுவும் பணிகளை தான் நிறைவுசெய்துவிட்டதாக அது கூறியுள்ளது.

அதேபோல, அங்குள்ள கடைகளில் வெப்பத்தைக் கண்டுபிடிக்கும் கருவிகளையும் பொருத்திவிட்டதாகவும் இனி கடைகள் தீப்பாதுகாப்புக்குத் தயாராகும் பணிகள் மட்டுமே நிலுவையில் உள்ளதாகவும் அது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

முறையான அனுமதி இன்றி செய்துகொண்ட மாற்றங்களை அகற்றிவிட்டு கடைக்குள் தீயணைப்புக்கான நீர்தெளிப்பான்களைப் பொருத்த வேண்டும் என்று கடைகளை அந்த அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

பாசிர் பாஞ்சாங் மொத்த விற்பனை நிலையம் 1981ஆம் ஆண்டு முதல் 1984ஆம் ஆண்டு வரை கட்டம் கட்டமாக உருவாக்கப்பட்டது.

பழங்கள், காய்கறிகள், உலர்ந்த உணவுகள் போன்றவற்றின் மொத்த வியாபாரிகளுக்கு இடமளிக்கும் வகையில் அந்த நிலையம் கட்டப்பட்டது.

முன்னதாக, அவர்கள் நகருக்குள் மொத்த விற்பனைக் கடைகளை நடத்தி வந்தனர். நகர்ப்புற மறுசீரமைப்பு காரணமாக அவர்கள் வேறிடத்துக்கு மாறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதற்கிடையே, ஜூரோங் மீன்பிடித் துறைமுகத்தின் குத்தகைக் காலத்தை 2040ஆம் ஆண்டு வரை எஸ்எஃப்ஏ நீடிக்க உள்ளது. சிங்கப்பூரின் ஒரே மீன்பிடித் துறைமுகமான அதன் குத்தகையை 2030ஆம் ஆண்டுக்குள் நிறைவு செய்ய இதற்கு முன்பு திட்டமிடப்பட்டது.

ஆகஸ்ட் 29ஆம் தேதி காலை, நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது, முதல் தொகுதி குத்தகைதாரர்களைச் சந்தித்தார். அங்கு அவர் ஆதரவு தொகுப்புகளையும் குத்தகை நீட்டிப்பையும் அறிவித்தார்.

சிங்கப்பூரின் உணவு விநியோகச் சங்கிலியில் மீள்தன்மையை ஆதரிப்பதற்காக, மொத்த விற்பனை நிலையம் மேம்படுத்தப்பட்டு, புத்துயிர் பெறுவதும், எதிர்காலத்திற்குத் தயாராக இருப்பதும் மிக முக்கியம் என்று அவர் கூறினார்.

“பாசிர் பஞ்சாங் மொத்த விற்பனை நிலையத்தில் முறைப்படுத்தல் பணிகளின் போது சில சிரமங்கள் ஏற்படக்கூடும் என்றாலும், சிங்கப்பூர் உணவு அமைப்பு சம்பந்தப்பட்ட பங்குதாரர்களுடன் தொடர்ந்து நெருக்கமாகப் பணியாற்றும். வணிக தொடர்ச்சியை உறுதி செய்வதற்கும் இடையூறுகளைக் குறைப்பதற்கும் தேவையான உதவிகளை வழங்கும்,” என்றும் திரு ஸாக்கி விளக்கினார்.

குறிப்புச் சொற்கள்