முதலீடு, வர்த்தக பங்காளித்துவ எதிர்காலத்திற்கான முதலாவது அமைச்சர்நிலைச் சந்திப்பு

விநியோகத் தொடர் மீள்திறனில் கவனம் செலுத்த இணக்கம்

2 mins read
96c7aa1c-9862-4594-b97b-e5971c1c5ac8
சிங்கப்பூரின் முதல் முதலீடு, வர்த்தக பங்காளித்துவ எதிர்காலத்திற்கான அமைச்சர்நிலைச் சந்திப்பைத் தொடர்ந்து, ‌‌‌ஷங்ரிலா அரங்கில் செய்தியாளர்களைச் சந்தித்த பங்காளி நாடுகளின் பிரதிநிதிகள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

விநியோகத் தொடர் மீள்திறன், விதிகள் அடிப்படையிலான வர்த்தக அமைப்பு, தொழில்நுட்பப் பயன்பாடு என உலக வர்த்தகச் சூழலில் வாய்ப்புகளை அதிகரிப்பதில் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் இணக்கம் கண்டுள்ளன.

சிங்கப்பூரின் முதலாவது முதலீடு, வர்த்தகப் பங்காளித்துவ எதிர்காலத்திற்கான அமைச்சர்நிலைச் சந்திப்பில் (Future of Investment and Trade Partnership Ministerial Meeting) இத்தகைய பல்வேறு முன்னெடுப்புகள் ஆலோசிக்கப்பட்டதாகத் துணைப் பிரதமரும் வர்த்தக, தொழில் அமைச்சருமான கான் கிம் யோங் தெரிவித்தார்.

அனைத்துலக வர்த்தக அமைப்புகள் எதிர்கொண்டுவரும் சவால்களுக்கு இடையே வெளிப்படையான, நியாயமான வர்த்தக நடைமுறைகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த முதலீடு, வர்த்தக எதிர்காலப் பங்காளித்துவம் அறிமுகம் கண்டது.

இந்தப் பங்காளித்துவம், விநியோகத் தொடர் மீள்திறன், முதலீட்டு ஆதரவு, தீர்வையில்லா வணிகக் கட்டுப்பாடுகள், வணிக நடைமுறைகளை நெறிப்படுத்துதல், வர்த்தகத் தொழில்நுட்பம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.

இவ்வாண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் கண்ட இந்தப் பங்காளித்துவ அமைப்பு முதலில் 14 நாடுகளுடன் தொடங்கிய நிலையில், தற்போது பராகுவே, மலேசியா என மேலும் இரு நாடுகள் அதில் இணைந்துள்ளன.

இந்நிலையில், சிங்கப்பூரின் முதலாவது முதலீடு, வர்த்தக பங்காளித்துவ எதிர்காலத்திற்கான அமைச்சர்நிலைச் சந்திப்பு செவ்வாய்க்கிழமை (நவம்பர் 18) ‌‌‌ஷங்ரிலா ஹோட்டல் அரங்கில் நடைபெற்றது.

துணைப் பிரதமர் கான் தலைமையேற்ற இச்சந்திப்பில் 16 பங்காளி நாடுகளின் பிரதிநிதிகளும், உறுப்பினரல்லாத ஆறு பங்காளி நாடுகளைச் சேர்ந்தோரும் பங்கேற்றனர். உலக வர்த்தக அமைப்பின் தலைமை இயக்குநர் கோசி ஒக்கோஞ்சோ இவியலா இணையவழியில் பங்கேற்றார்.

“சிங்கப்பூருக்கு வர்த்தகம் உயிர்நாடி. அது, மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் போல் மூன்று மடங்கிற்கும் அதிகம்,” எனக் குறிப்பிட்ட திரு கான், “இந்தப் பங்காளித்துவம், விதிகள் சார்ந்த அமைப்புக்கான புதிய தீர்வுகளை வகுக்கும். இது சிறு, குறு நாடுகளுக்கு முக்கியமானதாக இருக்கும்,” என்றும் சொன்னார்.

விநியோகத் தொடர் மீள்திறன் குறித்துப் பேசிய சுவிட்சர்லாந்து பொருளியல் விவகாரச் செயலகத்தின் இயக்குநர் ஹெலன் பட்லிகர் ஆர்ட்டியடா, “நெருக்கடி காலத்தில் வர்த்தக ஆதரவு, தகவல் பரிமாற்றம், அபாயங்களைக் குறைத்தல், அனுபவப் பகிர்வு, தொடர்பையும் ஒருங்கிணைப்பையும் மேம்படுத்துதல் ஆகியவற்றில் ஒத்துழைப்பு வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டன,” என்றார்.

இவற்றுக்கு 16 நாடுகளில் 13 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. தொடர்ந்து, அவை சட்டபூர்வமாக இல்லாமல், சிறந்த நடைமுறைகளை அமைக்கும் நோக்கில் செயல்படும் என்றும் திரு கான் தெரிவித்தார்.

இது சிறு நாடுகள், ஒத்த கருத்துள்ள நாடுகள், வர்த்தகத்தை அடிப்படையாகக் கொண்டு சுழலும் பொருளியல் கொண்ட நாடுகள் ஒன்றுக்கொன்று ஆதரவளிக்க ஏற்படுத்தப்பட்ட திட்டம் என்றும் எந்த நாடுகளுக்கு எதிரான ஒன்றிணைவு இல்லை என்றும் அமைச்சர்களும் பிரதிநிதிகளும் தெளிவுபடுத்தினர்.

விநியோகத் தொடர் மீள்திறன் தொடர்பான முடிவுகளுடன், பிற அம்சங்கள் பேச்சுவார்த்தையில் இருப்பதாகவும், அதுகுறித்த விவரங்கள் அடுத்தடுத்த சந்திப்புகளைத் தொடர்ந்து வெளியிடப்படும் என்று துணைப் பிரதமர் தெரிவித்தார்.

அடுத்த ஆண்டுக்கான அமைச்சர்நிலைச் சந்திப்பு நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்