தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பகடிவதை தொடர்பான மறுஆய்வில் பெற்றோர், கல்வியாளர்கள் பங்கெடுப்பு

2 mins read
de360118-ede2-43ef-a15a-047b31cb33e7
பகடிவதை ஏற்றுக்கொள்ளக்கூடியதன்று எனப் பகடிவதை செய்யும் மாணவகர்களுக்குக் கற்பிக்க வேண்டும் என்று ஜூரோங் ஈஸ்ட்-புக்கிட் பாத்தோக் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்  டேவிட் ஹோ தெரிவித்துள்ளார். - படம்: சாவ்பாவ்

பகடிவதைச் சம்பவங்களைக் கையாள்வது தொடர்பான மறுஆய்வைக் கல்வி அமைச்சு இவ்வாண்டு தொடங்கியது. இந்நிலையில், மறுஆய்வின் அடுத்தகட்டத்தில் பெற்றோர், கல்வியாளர்கள், நிபுணர்கள், சமூகத்தினர் ஆகியோர் பங்கெடுப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை ஜூரோங் ஈஸ்ட்-புக்கிட் பாத்தோக் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டேவிட் ஹோ ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 24) இன்ஸ்டகிராமில் பதிவிட்டார்.

முன்னாள் ஆசிரியரான திரு ஹோ, கல்வி அமைச்சின் நாடாளுமன்றக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.

பகடிவதையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இரு சிறு பிள்ளைகளுக்குத் தந்தையான திரு ஹோ கூறினார்.

அது, நாட்டின் கலாசாரத்தின் ஒரு பகுதியாவதை விடக்கூடாது என்று தமது முதல் நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் திரு ஹோ கடந்த வாரம் கலந்துகொண்டார். வலியுறுத்தினார்.

இருப்பினும், பகடிவதைச் சம்பவங்கள் தலைதூக்கினால் அத்தவற்றைச் செய்பவர்கள் தங்கள் தவறுகளை உணர்ந்து திருந்த சரியான அணுகுமுறையும் ஆதரவும் நடப்பில் இருக்க வேண்டும் என்றார் அவர்.

நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விவகாரங்களில் பகடிவதை தொடர்பான விவகாரங்களும் அடங்கும்.

அண்மையில் செங்காங் கிரீன் தொடக்கப்பள்ளியில் சக மாணவியைப் பகடிவதை செய்த தொடக்கநிலை மூன்றாம் வகுப்பு மாணவனுக்குப் பிரம்படி கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமது மகளை மாணவர்கள் மூவர் பகடிவதை செய்ததாகப் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் பள்ளியில் புகார் அளித்தார். அதையடுத்து, சிறுமியின் தாயாருக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அந்த மூன்று மாணவர்களும் பள்ளிகளிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

பகடிவதைச் சம்பவங்களுக்கு எதிராகப் பள்ளிகள் எடுக்கும் நடவடிக்கைகள் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்று பெற்றோரும் பொதுமக்களும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பகடிவதை தொடர்பாகக் கல்வி அமைச்சின் மறுஆய்வு குறித்து திரு ஹோ, சம்பந்தப்பட்ட சிறுவரின் வயதைக் கருத்தில் கொண்டு அதற்குத் தகுந்த நடவடிக்கை எடுப்பது மிகவும் முக்கியம் என்று வலியுறுத்தினார்.

இது அச்சிறுவரின் அறிவாற்றல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம் என்றார் அவர். உதாரணத்துக்கு, அந்த மாணவன் செய்தது தவறு என்பதை அவனுக்குப் புரியவைக்க தேவையான வழிகாட்டுதலை வழங்க வேண்டும் என்று திரு ஹோ கூறினார்.

பகடிவதை ஏற்றுக்கொள்ளக்கூடியதன்று என்றும் கனிவன்பு போன்ற பண்புநெறிகளுக்கு அது எதிரானது என்றும் பகடிவதை செய்யும் மாணவர்களுக்குக் கற்பிக்கப்பட வேண்டும் என்று திரு ஹோ கூறினார்.

குறிப்புச் சொற்கள்
பகடிவதைமாணவர்கள்நாடாளுமன்ற உறுப்பினர்மறுஆய்வு