சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூ வாழ்ந்த ஆக்ஸ்லி ரோடு இல்லத்தைத் தேசியச் சின்னமாக்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு அவரின் இளைய புதல்வர் திரு லீ சியன் யாங் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்.
எண் 38, ஆக்ஸ்லி ரோட்டில் உள்ள அந்த இல்லத்தின் ஒரே உரிமையாளர் திரு லீ சியன் யாங்.
தேசிய மரபுடைமைக் கழகமும் சிங்கப்பூர் நில ஆணையமும் ஆக்ஸ்லி ரோடு இல்லத்தை அரசிதழில் சேர்க்கும் திட்டம் குறித்து இம்மாதம் (நவம்பர் 2025) 3ஆம் தேதி அறிவித்தன.
நாட்டின் முதல் பிரதமர் லீ குவான் யூவின் குடும்ப இல்லம் அமைந்திருக்கும் வளாகம், வரலாற்று முக்கியத்துவமும் தேசிய முக்கியத்துவமும் வாய்ந்தது என்று அப்போது அவை குறிப்பிட்டிருந்தன. சிங்கப்பூரைத் தோற்றுவித்த தலைவர்களின் அரசியல் கலந்துரையாடல்கள், நடவடிக்கைகள், முடிவுகள் முதலியவை எடுக்கப்பட்ட இடம் அது என்றும் இரண்டு அமைப்புகளும் கூறின.
காலஞ்சென்ற திரு லீ குவான் யூவின் மகன் என்ற முறையிலும் அறங்காவலர் என்ற விதத்திலும் ஆக்ஸ்லி ரோடு இல்லத்தைத் தேசியச் சின்னமாக அரசிதழில் சேர்ப்பதற்கான பரிந்துரைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாகத் திரு லீ சியன் யாங் சொன்னார். பிரதமர் லாரன்ஸ் வோங்கிற்குத் திங்கட்கிழமை (நவம்பர் 19) அனுப்பிய கடிதத்தில் அவர் அவ்வாறு கூறினார். திரு லீ சியன் யாங், அந்தக் கடிதத்தை ஃபேஸ்புக்கிலும் பதிவிட்டிருந்தார்.
ஆக்ஸ்லி ரோடு இல்லத்தை அரசிதழில் சேர்க்கும் பரிந்துரைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கான காலக்கெடு திங்கட்கிழமையுடன் (நவம்பர் 17) முடிவடைகிறது. இல்லம் அரசிதழில் சேர்க்கப்பட்டு, பின்னர் அரசாங்கத்தால் வாங்கப்பட்டால் அது இருக்கும் வளாகம், மரபுடைமைப் பூங்கா போன்ற பொதுவெளியாக மாற்றப்படும் என்று அதிகாரிகள் ஏற்கெனவே தெரிவித்திருந்தனர்.
சட்டப்படி, தற்காலிகக் கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் டேவிட் நியோ, திரு லீ சியன் யாங்கின் எதிர்ப்பைப் பரிசீலிக்க வேண்டும். ஆக்ஸ்லி ரோடு இல்லத்தைத் தேசியச் சின்னமாக்கும் பாதுகாப்பு உத்தரவை அதன் பிறகும் திரு நியோவால் பிறப்பிக்கமுடியும்.
எவ்வளவு காலத்திற்குள் அமைச்சர் முடிவெடுக்க வேண்டும் என்பது சட்டத்தில் கூறப்படவில்லை.
தொடர்புடைய செய்திகள்
இல்லத்தை இடிக்கவேண்டும் என்ற தமது தந்தையாரின் விருப்பத்தைத் திரு லீ சியன் யாங் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். மாறாக இல்லம் தேசியச் சின்னமானால் அது திரு லீ குவான் யூவை மக்கள் செயல் கட்சி அவமதிப்பதற்குச் சமமாகும் என்றார் அவர்.
“வாழ்நாள் முழுதும் திரு லீ குவான் யூ, அவரின் இல்லம் இடிக்கப்பட வேண்டும் என்பதில் தெளிவாக, குழப்பமின்றி இருந்தார். சின்னமாக்கப்படுவதற்கு அவர் எதிர்ப்புத் தெரிவித்தார். அத்தகைய விழுமியங்களில் அவர் உறுதியாக இருந்தார்,” என்று திரு லீ சியன் யாங் கடிதத்தில் எழுதியுள்ளார்.
அரசிதழில் சேர்க்க முற்படுவதை நியாயப்படுத்துவதற்காகப் பல தவறான, சுய-முரண்பாடான வாதங்கள் முன்வைக்கப்படுவதாக அவர் சொன்னார்.
“இன்று பிரதமர் வோங், முடிவு உங்கள் கைகளில்தான் உள்ளது. இளம் அமைச்சரிடமோ குழுவிடமோ அல்ல,” என்று திரு லீ சியன் யாங் தெரிவித்தார்.
ஆக்ஸ்லி ரோடு குறித்த பல்வேறு திட்டங்களை ஆராயுமாறு 2016ஆம் ஆண்டில் அப்போதைய அமைச்சரவை நியமித்த அமைச்சர்நிலைக் குழுவில் உறுப்பினராக இருந்தார் திரு வோங். அப்போது அவர் தேசிய வளர்ச்சி அமைச்சராகப் பணியாற்றினார்.

