குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு $60 போக்குவரத்து பற்றுச்சீட்டு

2 mins read
15fd5ec9-c88c-42fb-8a0f-ec19764550ee
தற்போது வழங்கப்படும் பற்றுச்சீட்டுகளைக் கொண்டு போக்குவரத்து அட்டைகளை நிரப்பிக்கொள்ளலாம் அல்லது மாதாந்தர போக்குவரத்து அட்டைகளை வாங்கிக்கொள்ளலாம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் குறைந்த வருமானம் ஈட்டும் 12,000க்கும் அதிகமான குடும்பங்களுக்கு 60 வெள்ளி போக்குவரத்து பற்றுச்சீட்டுகள் வழங்கப்படவுள்ளன.

இந்தப் பற்றுச்சீட்டுகள் ஜூலை மாத இறுதிக்குள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. சமூகநல நிதி (ComCare) திட்டங்கள்கீழ் வரும் குடும்பங்கள் இதைப் பெறுவார்கள்.

குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்குப் போக்குவரத்து செலவுகள் பாரமாக இருக்கக்கூடாது என்பதால் இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது என்று தற்காலிகப் போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை (ஜூலை 11) ஃபேஸ்புக் பக்கத்தில் பற்றுச்சீட்டுகள் குறித்து அவர் தகவல் வெளியிட்டார்.

இந்த நிதியுதவிக்குத் தகுதியானவர்களுக்கு அஞ்சல் அல்லது குறுஞ்செய்தி வழியாகப் பற்றுச்சீட்டுகள் அனுப்பப்படும்.

பற்றுச்சீட்டு வேண்டிச் சில குடியிருப்பாளர்கள் விண்ணப்பம் செய்திருக்கலாம் ஆனால் அவர்களுக்கு அது கிடைக்காமல் இருக்கக்கூடும். அவர்கள் இணையம் வழி அல்லது சமூக நிலையங்கள் வழி மேல்முறையீடு செய்யலாம்.

மேல்முறையீடு செய்ய விரும்புபவர்கள் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

தற்போது வழங்கப்படும் பற்றுச்சீட்டுகளைக் கொண்டு போக்குவரத்து அட்டைகளை நிரப்பிக்கொள்ளலாம் அல்லது மாதாந்தர போக்குவரத்து அட்டைகளை வாங்கிக்கொள்ளலாம்.

இந்தப் பற்றுச்சீட்டுகளை 2026ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதிக்குள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதன் பின்னர் அது காலாவதியாகிவிடும்.

இந்த உதவித்திட்டம் மூலம் 320,000க்கும் அதிகமான பற்றுச்சீட்டுகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றார் அமைச்சர் சியாவ்.

சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின்கீழ் சமூகநல நிதி உதவித்திட்டம் செயல்படுகிறது.

தினசரி வாழ்க்கைச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் தவிக்கும் தனி நபர்களுக்கும் குடும்பங்களுக்கும் இந்தத் திட்டம்மூலம் உதவிகள் வழங்கப்படும்.

“அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் பொதுப் போக்குவரத்து எப்போதும் மலிவு விலையில் இருக்கும் என்பதே எங்கள் உறுதிப்பாடாகும்,” என்று அமைச்சர் சியாவ் மேலும் கூறினார்.

சமூகநல நிதி உதவித் திட்டத்திற்குத் தகுதியானவர்களா என்பதை http://go.gov.sg/ptv2024 என்ற இணையப்பக்கத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

குறிப்புச் சொற்கள்