$32 மில்லியன் மோசடியில் சிறிய தொகையே மீட்கப்பட்டுள்ளது

2 mins read
a33cdbd6-8712-4d2e-ab9f-59941cfae6ac
இணையர் இருவரும் ஜோகூர் பாருவில் 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைதுசெய்யப்பட்டு, சிங்கப்பூருக்கு அழைத்து வரப்பட்டனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கடந்த 2022ல் $32 மில்லியன் மதிப்புள்ள ஆடம்பரப் பொருள்களில் மோசடிசெய்து கைதான இணையர் 2024ஆம் ஆண்டில் குற்றம் நிரூபிக்கப்பட்டுச் சிறைக்குச் சென்றனர்.

கணவர் பி ஜியாபெங்குக்கு ஐந்து வருடம் 10 மாத சிறையும் மனைவி பன்சுக் சிரிவிப்பாவுக்கு 14 ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. தம்பதிகளால் ஏமாற்றப்பட்ட 180க்கும் மேற்பட்ட மோசடிப் புகார்கள் அப்போது செய்யப்பட்டது.

இந்த மோசடி பற்றி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகத்தின் கேள்விகளுக்கு காவல்துறை வெள்ளிக்கிழமை (அக்டோபர் 17) பதிலளித்தது.

மோசடி நடந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 80 விதமான நகைகள், ஆடம்பர கைப்பைகள், அலங்காரப் பொருள்கள், அணிகலன்கள் போன்றவற்றுடன் $200,000 ரொக்கத்தையும் காவல்துறை இதுவரை பறிமுதல் செய்துள்ளது என்று குறிப்பிட்டது. பறிமுதல் செய்யப்பட்ட அனைத்தின் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அது கூறியது.

வாடிக்கையாளர் பலரை ஏமாற்றி இணையர் பேங்காக் நகரில் $2 மில்லியன் மதிப்பில் வாங்கிய ஒரு சொத்து முதலீட்டை சிங்கப்பூர் காவல்துறை தாய்லாந்து அதிகாரிகளின் உதவியுடன் விசாரித்து வருகிறது.

மோசடியில் பலர் வாழ்நாள் சேமிப்பை இழக்க நேரிட்டது. கைக்கடிகாரங்கள், கார்கள், ஆடம்பரப் பொருள்கள் என்ற பலவற்றில் அவர்கள் முதலீடு செய்வதாக எண்ணி இறுதியில் இணையரால் ஏமாந்தனர். அவர்கள் இழந்தவற்றை திரும்பப் பெறும் சாத்தியம் மிகவும் குறைவாகவே உள்ளது.

‘டிரேட்நேஷன்’ என்ற பெயரில் தம்பதிகள் 2021ஆம் ஆண்டில் கைக்கடிகார விநியோகம் செய்வதற்காகத் தொடங்கிய நிறுவனம் ஆரம்பத்தில் நற்பெயருடன் செயல்பட்டது.

அடுத்த ஆண்டான 2022 ஜனவரி மாதம் அவர்கள் மற்றொரு நிறுவனமான ‘டிரேட்லக்சரி’ என்ற ஆடம்பரக் கைப்பைகள் விநியோகிக்கும் வர்த்தகத்தில் ஈடுபட்டனர். அதே ஆண்டு ஜூன் மாதம் முதல் பலரது முன்பதிவுகள் நிறைவேற்றப்படவில்லை. அதிலிருந்துதான் தம்பதிகளின் மோசடிக் குற்றங்கள் வெளிச்சத்துக்கு வரத்தொடங்கின.

குறிப்புச் சொற்கள்