பெருஞ்செல்வந்தர் ஓங் பெங் செங்கின் சிங்கப்பூர் நிரந்தரவாசம் ரத்து செய்யப்படாது என்று குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் திங்கட்கிழமை (நவம்பர் 10) தெரிவித்தது.
அதற்கு மாறாக, அவருக்கு எச்சரிக்கைக் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் முறையற்ற வகையில் நடந்துகொண்டால் அவரது சிங்கப்பூர் நிரந்தரவாசம் ரத்து செய்யப்படலாம் என்று ஆணையம் தெரிவித்தது.
குற்றச் செயலில் ஈடுபடும் அனைத்து சிங்கப்பூர் நிரந்தரவாசிகளின் நிரந்தரவாசம் மறுஆய்வு செய்யப்படுவதாக அது கூறியது.
முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் தொடர்பான வழக்கு விசாரணைக்கு இடையூறு விளைவித்ததை மலேசியரான ஓங் பெங் செங் ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து, ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று அவருக்கு $30,000 அபராதம் விதிக்கப்பட்டது.
அன்பளிப்புகளைப் பெற்றுக்கொள்ள அரசாங்க ஊழியராக இருந்த திரு ஈஸ்வரனைத் தூண்டியதாகவும் திரு ஓங் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
தீர்ப்பளிக்கப்பட்டபோது இந்தக் குற்றச்சாட்டு கருத்தில் கொள்ளப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூர் நிரந்தரவாசிகளும் வேலை அனுமதி அட்டை வைத்திருக்கும் ஊழியர்களும் சிங்கப்பூரில் குற்றச் செயல்களில் ஈடுபடும்போது எத்தகைய சூழலில் அவர்களது நிரந்தரவாசம் அல்லது வேலை அனுமதிச் சீட்டு ரத்து செய்யப்படும் என்று ஹவ்காங் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டெனிஸ் டான் கடந்த செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த உள்துறை அமைச்சர் கா. சண்முகம், சிங்கப்பூரில் சட்டத்துக்குப் புறம்பாக நடந்துகொள்ளும் வெளிநாட்டினர்களின் வேலை அனுமதி அட்டைகள் ரத்து செய்யப்படலாம் என்றும் அவர்கள் சிங்கப்பூருக்கு மீண்டும் வரத் தடை விதிக்கப்படலாம் என்றும் தெரிவித்தார். இது சிங்கப்பூர் நிரந்தரவாசிகளுக்கும் வேலை அனுமதி அட்டை வைத்திருப்போருக்கும் பொருந்தும் என்றார் அவர்.
“வழக்கு தொடர்பான விவரங்கள், குற்றச்செயல் எந்த அளவுக்குக் கடுமையானது, சம்பந்தப்பட்டவரின் குடும்பத்துக்கும் சிங்கப்பூருக்கும் இருக்கும் தொடர்பு, சிங்கப்பூரின் வளர்ச்சிக்காக சம்பந்தப்பட்டவரின் பங்களிப்பு ஆகியவற்றை ஆராய்ந்து மதிப்பீடு செய்யும் கட்டமைப்பு இருக்கிறது,” என்றார் அமைச்சர் சண்முகம்.

