2031க்குள் எல்லா பள்ளிகளுக்கும் ஒரு பொதுப் பயனீட்டுத் தளம்

2 mins read
e4d5b9a9-be89-4eed-b337-1b08ac8a7e4c
கோப்புப் படம்: - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வரும் 2031ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூரில் உள்ள எல்லா பள்ளிகளும் ஒருங்கிணைக்கப்பட்ட பொதுப் பயனீட்டுத் (facilities management) தளத்தைப் பயன்படுத்தும்.

சிறப்புத் தேவையுடையோருக்குக் கல்வி வழங்கும் பள்ளிகளும் அவற்றில் அடங்கும். ஸ்மார்ட் எஃப்எம் (Smart Facilities Management) எனப்படும் இந்தப் புதிய அறிவார்ந்த தளத்தைக் கல்வி அமைச்சு கவனிக்கும். இதன் முலம் எல்லா பள்ளிகளின் விளக்கு, குளிர்சாதன வசதி, எரிசக்தி, தண்ணீர்ப் பயன்பாடு ஒரே தளத்தில் கவனிக்கப்படும்.

தற்போது அந்தந்தப் பள்ளிகள் தங்களின் பொதுப் பயனீட்டு உபயோகத்தைத் தாங்களே கவனித்துக்கொண்டு வருகின்றன.

தற்போது பள்ளிகளில் செயல்பாட்டில் இருக்கும் அபாய ஒலிக் கருவிகள், நீர்த் தொட்டிகள், சர்வர் அறைகளில் இயங்கும் குளிர்சாதன வசதி ஆகியவை மாற்றப்படப்போவதில்லை. அதற்குப் பதிலாக அவை அனைத்தின் செயல்பாடுகளும் ஒருங்கிணைக்கப்படுகின்றன.

மேலும், ஸ்மார்ட் எஃப்எம் தளம், கவ்டெக் அமைப்பின் மேக இணையச் சேவைத் (cloud service) தளத்துடன் இணைக்கப்படும். உடனடிக் கண்காணிப்புக்காகவும் கட்டுப்பாட்டுக்காகவும் அவ்வாறு செய்யப்படவுள்ளது.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பார்வையிட்ட ஒப்பந்தப் புள்ளிகளின்படி, ஸ்மார்ட் எஃப்எம் 354 பள்ளிகளின் பொதுப் பயனீட்டைக் கவனிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அப்படியென்றால் வலுவான இணையத் தொடர்புகளின் மூலம் ஸ்மார்ட் எஃப்எம்மின்வழி ஒரே நேரத்தில் பல பள்ளிகளின் பொதுப் பயனீட்டைக் கவனித்துக்கொள்ள முடியும்.

இந்தத் தளத்தைச் சீராக வைத்து சரிபார்க்கும் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகளை கல்வி அமைச்சு கடந்த மார்ச் மாதம் என்சிஎஸ் சிங்கப்பூர் நிறுவனத்திடம் ஒப்படைத்தது. அந்த ஒப்பந்தப்புள்ளிகளின் மதிப்பு 78.6 மில்லியன் வெள்ளி.

இதுகுறித்த கேள்விகளுக்குக் கல்வி அமைச்சு, ஓரிடத்தில் எத்தனை பேர் இருக்கின்றனர் என்பதற்கேற்ப அங்கு விளக்குகள், குளிர்சாதன வசதி ஆகியவற்றை எந்த அளவு செயல்படுத்த வேண்டும் என்பதை முடிவு செய்யலாம் என்று தெரிவித்தது. மேலும், தண்ணீர், எரிசக்திப் பயன்பாட்டைக் கண்காணித்து அவற்றைச் சேமிக்கும் நடவடிக்கைகளை எடுக்கலாம் என்றும் அமைச்சு குறிப்பிட்டது.

இவ்வாண்டு முதல், ஸ்மார்ட் எஃப்எம் தளம் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் என்று அமைச்சு தெரிவித்தது. இத்தளத்தைக் கொண்டு தானியக்க முறை, உடனுக்குடன் தகவல்களைத் தெரியப்படுத்துவது ஆகியவற்றின் மூலம் பள்ளிகளின் பொதுப் பயனீட்டைக் கண்காணித்து கவனிக்க முடியும் என்றும் அமைச்சு சொன்னது.

குறிப்புச் சொற்கள்