கார் சக்கரங்களிலிருந்து காற்றை வெளியேற்றிய என்யுஎஸ் மாணவருக்கு அபராதம்

2 mins read
20d1f13f-2b42-4001-925b-5fd3f695c01f
பெஞ்சமின் சியா யிட் லூங்கிற்கு $3,000 அபராதம் விதிக்கப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் ஏழு கார்களின் சக்கரங்களிலிருந்து காற்றை வெளியேற்றிய சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக (என்யுஎஸ்) மாணவருக்கு $3,000 அபராதம் விதிக்கப்பட்டது.

குறும்புச் செயலில் ஈடுபட்டதாக 24 வயது பெஞ்சமின் சியா யிட் லூங் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

வியாழக்கிழமையன்று (நவம்பர் 6) அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

பருவநிலை மாற்றம், சுற்றுப்புறம் தொடர்பான விவகாரங்களில் சிங்கப்பூரரான சியாவுக்கு அதிக ஆர்வம் இருந்தது என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

எனவே, தமது வீட்டிற்கு அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த எஸ்யுவி கார்களின் சக்கரங்களிலிருந்து காற்றை வெளியேற்றி அவ்வகை கார்களால் சுற்றுப்புறத்துக்கு ஏற்படும் பாதிப்பை எடுத்துக்கூறும் துண்டு பிரசுரங்களை அவற்றில் வைக்க சியா முடிவெடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் தேதியன்று காலை 10 மணி அளவில், பச்சைப் பயறு பொட்டலம் ஒன்றை வாங்கிக்கொண்டு உட்லண்ட்ஸ் டிரைவ் 14ல் உள்ள இரண்டு அடுக்குமாடி வாகன நிறுத்துமிடங்களுக்கு சியா சென்றார்.

அங்கிருந்த ஏழு கார்களின் சக்கரங்களில் உள்ள காற்று அடைப்புக் கருவிகளைத் திறந்து அவற்றுக்குள் பச்சைப் பயற்றை சியா கொட்டினார்.

பிறகு காற்று அடைப்புக் கருவிகளை மீண்டும் மூடி வைத்தார்.

இதனால் சக்கரங்களிலிருந்து காற்று வெளியேறியது.

முதல் நான்கு கார்களின் அனைத்து சக்கரங்களிலிருந்தும் சியா காற்றை வெளியேற்றினார்.

எஞ்சிய கார்களின் ஒன்று அல்லது இரண்டு சக்கரங்களிலிருந்து அவர் காற்றை வெளியேற்றினார்.

துண்டு பிரசுரங்களை கார்களின்மீது வைத்துச் சென்றார்.

இக்குற்றத்தைப் புரிந்த அதே நாளன்று சியா கைது செய்யப்பட்டார்.

பாதிக்கப்பட்ட கார்களின் உரிமையாளர்களில் ஒருவர் சக்கரங்களில் மீண்டும் காற்றைச் செலுத்த பெட்ரோல் நிலையத்துக்கு காரை ஓட்டியபோது வாகன நிறுத்துமிடத்தின் தடுப்பு ஒன்றில் கார் உரசியது. இதனால் கார் சேதமடைந்தது.

அதைப் பழுதுபார்க்க $380 செலவானது.

சியா, தாமாகவே முன்வந்து பாதிக்கப்பட்ட நபரிடம் $380 தொகையைக் கொடுத்துவிட்டார்.

குறிப்புச் சொற்கள்