லண்டன்: லண்டனில் வேலைகள் ஆக அதிக எண்ணிக்கையில் குறைந்துள்ளன.
வரி அதிகரித்தது, சம்பளச் செலவு கூடியது, பயனீட்டாளர்கள் குறைவாகச் செலவிட்டது முதலிய காரணங்களால் தலைநகரில் நாட்டின் மற்றப் பகுதிகளைவிட வேகமாக வேலைகளின் எண்ணிக்கை சரிந்தது.
சென்ற ஆண்டு (2024) அக்டோபர் மாதத்திற்குப் பிறகு லண்டனில் 45,000 வேலைகள் அகற்றப்பட்டன. அந்த நேரத்தில்தான் தொழிற்கட்சி அரசாங்கம், நிறுவனங்களின் தேசியக் காப்புறுதியில் 26 பில்லியன் பவுண்டு ($45 பில்லியன்) உயர்வை அறிவித்தது. அத்துடன் குறைந்தபட்ச ஊதியத்தையும் அரசாங்கம் கூட்டியது.
நாட்டில் குறைக்கப்பட்ட வேலைகளில் கால்வாசி லண்டனைச் சேர்ந்தவை. தென்கிழக்கு வட்டாரத்தையும் சேர்த்தால் வேலைகள் குறைக்கப்பட்ட விகிதம் 40 விழுக்காட்டை எட்டும்.
கடுமையாய்ப் பாதிக்கப்பட்ட துறைகளில் சில்லறை வணிகமும் விருந்தோம்பலும் அடங்கும். தேசியப் புள்ளிவிவர அலுவலகம் அந்தத் தகவல்களை வெளியிட்டது.
வரிகளையும் செலவுகளையும் பொறுத்தவரை ஐரோப்பாவில் லண்டனே ஆகக் குறைந்த போட்டித்தன்மையைக் கொண்ட நகரம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். கடந்த ஆண்டில் மட்டும் தலைநகரில் விருந்தோம்பல் துறையில் 30,000 வேலைகள் குறைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
“வாடகை அதிகம். வணிகக் கட்டணங்கள் அதிகம். சம்பளச் செலவும் அதிகம். அதிகமானோர் வரவில்லை என்றால் செலவைச் சமாளிப்பது கடினம். வணிக நிறுவனங்கள் தொடர்ந்து செயல்படுவதும் சிரமம்,” என்று யுகேஹாஸ்பிட்டாலிட்டி (UKHospitality)வர்த்தகக் குழுமத்தின் தலைமை நிர்வாகி கேட் நிக்கல்ஸ் கூறினார்.
‘இண்டீட்’ (Indeed) எனும் வேலைகள் குறித்த இணையத்தளம், சென்ற அக்டோபருக்குப் பிறகு லண்டனில் காலியாக இருந்த வேலைகளின் எண்ணிக்கை நாட்டின் மற்றப் பகுதிகளைவிட வெகு வேகமாய்க் குறைந்ததாகக் குறிப்பிட்டது.
தொடர்புடைய செய்திகள்
சில்லறை வணிக, விருந்தோம்பல் துறைகளில் வேலை விளம்பரங்கள் கிட்டத்தட்ட 40 விழுக்காடு சரிந்தன. பிரிட்டனின் பிற வட்டாரங்களில் விளம்பரங்கள் சில்லறை வணிகத் துறையில் 26 விழுக்காடும் விருந்தோம்பல் துறையில் 9 விழுக்காடும் குறைந்தன.
வரி உயர்வால் சில்லறை வணிகத் துறையில் மேலும் கூடுதலான வேலைகள் குறையும் என்ற கருத்தும் நிலவுகிறது.

